சென்னை திருவல்லிக்கேணியில் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து
சென்னை திருவல்லிக்கேணியில் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் காயம் அடைந்தனர். 3 கார்கள் சேதம் அடைந்தன.
சென்னை,
சென்னை திருவல்லிக்கேணி இருசப்ப கிராம தெருவில் என்.கே.டி.அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியை சுற்றி 500 மீட்டர் தூரத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழை காரணமாக, இந்த சுற்றுச்சுவர் ஈரப்பதத்துடன் இருந்ததாகவும், ஏற்கனவே சற்று சேதம் அடைந்த நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை சுமார் 7 மணியளவில் பள்ளியின் பின்புற சுற்றுச்சுவர் பயங்கர சத்தத்துடன் திடீரென்று இடிந்து விழுந்தது.
இதுதொடர்பாக போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தகவலை தொடர்ந்து ஐஸ் அவுஸ் போலீசார், மயிலாப்பூர் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
2 பேர் காயம்
இந்த விபத்தில் சுற்றுச்சுவருக்கு அருகில் கடை அமைத்திருந்த நிர்மலா (வயது 40) என்ற பெண்ணுக்கு இடுப்பில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல், அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் (30) என்பவருக்கும் லேசான காயம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் சுற்றுச்சுவரை ஒட்டி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 3 கார்கள், மினி ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள் மீதும் உடைந்த கட்டிட பாகங்கள் விழுந்தன. இதில் 3 கார்களின் முன்பக்க கண்ணாடி உள்பட அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் பெரும்பாலான பகுதிகள் சேதம் அடைந்தன.
போலீசார் விசாரணை
இடிந்து விழுந்து கிடந்த கட்டிட பாகங்களை பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் அகற்றும் பணியை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முடுக்கிவிட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. நல்ல வேளையாக பள்ளி முடிந்து மாணவிகள் வீட்டுக்கு சென்ற நேரத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதனால் பெரும் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.