நெசவாளர் காலனி பள்ளிக்குள் தேங்கிய மழைநீர் அகற்றம்
திருப்பூரில் நெசவாளர் காலனி பள்ளிக்குள் தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டது. வடிகால் வசதிகளை மேம்படுத்த மேயர் தினேஷ்குமார் உத்தரவிட்டு பணிகள் நடக்கிறது.
பள்ளியில் தேங்கிய மழைநீர் அகற்றம்
திருப்பூரில் நேற்றுமுன்தினம் மாலையில் கொட்டித்தீர்த்த கனமழையால் நெசவாளர் காலனி நகராட்சி உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கியது. இந்த பள்ளியில் 1,700-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். மழைநீர் தேங்கியதால் நேற்று முன்தினம் மாலை பெற்றோர்கள் உதவியோடு மாணவ-மாணவிகள் சென்றனர். ஒவ்வொரு முறையும் மழை பெய்யும்போது மழைநீர் தேங்குவதால் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோர் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்தநிலையில் நேற்று அதிகாலை திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், நெசவாளர் காலனி பள்ளிக்கு சென்று, மழைநீரை அகற்றும் பணியை மாநகராட்சி ஊழியர்கள் மூலமாக முடுக்கிவிட்டார். 2 வாகனங்கள் மூலமாக தண்ணீர் உறிஞ்சி அகற்றப்பட்டது. அதுபோல் பள்ளி வளாகத்தில் தேங்கிய சகதிகளையும் அகற்றி மண் கொட்டும் பணியில் ஈடுபட்டனர். மேலும் வளாகத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. பள்ளி வகுப்புகள் தொடங்குவதற்கு முன் மழைநீர் அனைத்தும் அகற்றப்பட்டு வளாகம் தூய்மைப்படுத்தப்பட்டது. மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடியும் வந்து ஆய்வு மேற்கொண்டார்.
மேயர் ஆய்வு
இதுகுறித்து மேயர் தினேஷ்குமார் கூறும்போது, 'நெசவாளர் காலனி அருகே 250 ஏக்கர் பரப்பளவில் சேகரமாகும் மழைநீர் நெசவாளர் காலனி பள்ளி அருகே வாய்க்கால் மூலம் செல்கிறது. கால்வாயில் மண் மற்றும் அடைப்பாகும்போது மழைநீர், ரோட்டை விட தாழ்வாக உள்ள பள்ளி வளாகத்துக்குள் புகுந்து விடுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் பள்ளிக்கு பின்புறம் கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான இடம் வழியாக மழைநீர் வடியும் வகையில் கால்வாய் வெட்டப்படுகிறது. அதுபோல் பள்ளிக்கு 2 நுழைவுவாசல் அமைக்க கல்வித்துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கு முன்புறம் மழைநீர் தேங்காத வகையில், மழைநீர் வடிகால்களை தூர்வாரி, மண் தேங்காமல் இருப்பதற்காக 2 இடங்களில் குழி போன்ற அமைப்பை ஏற்படுத்தி அந்த குழிக்குள் மண்ணை கட்டுப்படுத்தி அவற்றை அகற்ற முடியும். இதனால் வடிகாலில் மழைநீர் விரைவில் வடிந்து விடும். அதுபோல் பள்ளியில் உள்ள கட்டிடங்களின் மேற்புறம் விழும் மழைநீரை குழாய் மூலமாக மழைநீர் சேகரிப்பு அமைப்பில் விடவும், வெளியே கால்வாயில் விடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பள்ளி வளாகத்துக்குள் மேடாக்கும் வகையில் மண் நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்துக்குள் மழைநீர் தேங்காத வகையில் 6 திட்டங்களை உடனடியாக செயல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது' என்றார்.