நாய் கடித்து பள்ளி மாணவர் சாவு
சங்கரன்கோவில் அருகே நாய் கடித்து பள்ளி மாணவர் பாிதாபமாக இறந்தார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே நாய் கடித்து பள்ளி மாணவர் பாிதாபமாக இறந்தார்.
பிளஸ்-2 மாணவர்
சங்கரன்கோவில் அருகே உள்ள பெரிய கோவிலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாதுரை. இவர் மாற்றுத்திறனாளி. அவ்வப்போது கிடைக்கும் கூலி வேலைக்கு சென்று வருவாராம். இவருக்கு 2 மகன்கள். மூத்த மகன் அஜித் (வயது 17). சங்கரன்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இளைய மகன் சுஜித், பெரியகோவிலாங்குளம் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்று வரும் வழியில் அஜித்தை, வெறி நாய் கடித்ததாக கூறப்படுகிறது. இதை அஜித் வீட்டிற்கு தெரிவிக்காமல் இருந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அஜித் வாந்தி எடுத்துள்ளார்.
பரிதாப சாவு
அதன் பின் வீட்டில் உள்ளவர்கள் கேட்டபோது, நாய் கடித்த விவரத்தை கூறினார். இதனால் பதறிப்போன உறவினர்கள் சங்கரன்கோவில் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அஜித் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.