சாலை ஆக்கிரமிப்பால் பள்ளி மாணவி லட்சுமி ஶ்ரீ பலி: நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு? மக்கள் நீதி மய்யம் கேள்வி
தமிழகம் முழுக்க இருக்கும் சாலை ஆக்கிரமிப்புகளைப் போர்க்கால நடவடிக்கையாகக் கருதி அகற்ற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கேட்டுக்கொண்டுள்ளது.
சென்னை,
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை குரோம்பேட்டையில் பள்ளியில் சுதந்திர தினத்தைக் கொண்டாடிவிட்டு சைக்கிளில் வீடு திரும்பிய 12-ஆம் வகுப்பு மாணவி லட்சுமிஶ்ரீ மீது மாநகரப் பேருந்து ஏறி பலியான சம்பவம் அதிர்ச்சியையும் தாங்கமுடியாத துயரத்தையும் அளிக்கிறது. தங்களது மகளை இழந்து தவிக்கும் பெற்றோருக்கும், குடும்பத்தார்களுக்கும், நண்பர்களுக்கும் மக்கள் நீதி மய்யம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறது.
வெறும் 70 அடிகளே அகலம் உள்ள அஸ்தினாபுரம் ராஜேந்திர பிரசாத் சாலையின் இருபுறங்களிலும் தலா 15 அடிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் அரசு அதிகாரிகளிடம் பல முறை புகார் செய்தும், அரசும், அரசு அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கத் தவறியதன் விளைவே மாணவி தன் இன்னுயிரை இழப்பதற்குக் காரணம்.
இந்தப் பகுதி மட்டுமல்ல; தமிழகத்தின் பல பகுதிகளிலும் சாலைகளின் நிலவரம் இதுதான். சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அரசு அதிகாரிகள் எந்த முயற்சியும் எடுப்பதில்லை என்பது துரதிஷ்டவசமானது. இந்த கொடூரமான விபத்திலிருந்தாவது பாடம் கற்றுக்கொண்டு தமிழகம் முழுக்க இருக்கும் சாலை ஆக்கிரமிப்புகளைப் போர்க்கால நடவடிக்கையாகக் கருதி அகற்ற வேண்டும். விபத்துக்களையும் உயிரிழப்புகளையும் தடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளது.