தூக்குப்போட்டு பள்ளிக்கூட மாணவர் தற்கொலை
ஈரோட்டில் தூக்குப்போட்டு பள்ளிக்கூட மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோட்டில் தூக்குப்போட்டு பள்ளிக்கூட மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
பள்ளிக்கூட மாணவர்
ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள முத்தம்பாளையம் இமயம் நகரை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவருடைய மனைவி நாகஜோதி. இவர்களுடைய மகன் கோகுல் (வயது 15). இவர் வெள்ளோடு அரசு மேல்நிலை பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பின்னர் கடந்த 2-ந்தேதி கோகுல் பள்ளிக்கூடத்திற்கு சென்று வீடு திரும்பினார். அப்போது அவர் தனக்கு கண் வலிப்பதாக பெற்றோரிடம் கூறினார்.
இதனால் கோகுலை பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அப்போது அவருக்கு 'மெட்ராஸ் ஐ' இருப்பதாகவும், அதன் காரணமாக பள்ளிக்கூடத்திற்கு 3 நாட்கள் செல்ல வேண்டாம் எனவும் டாக்டர் தெரிவித்து உள்ளார். இதனால் கோகுல் வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை கோகுலின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். இவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
தூக்குப்போட்டு தற்கொலை
அதைத்தொடர்ந்து வேலை முடிந்து, மாலையில் கோகுலின் தாய் நாகஜோதி வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் மாடியில் உள்ள அறையின் கதவு உள்புறமாக தாழிடப்பட்டு இருந்தது. கதவை பலமுறை தட்டியும் பதில் ஏதும் வரவில்லை. பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள அறையில் கோகுல் தூக்கு போட்டு தொங்கி கொண்டு இருந்தார்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக கோகுலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே கோகுல் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, நன்றாக படிக்காத காரணத்தால் பெற்றோருக்கு பயந்து கோகுல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.