கூடுதல் பஸ் வசதி கேட்டு பள்ளி மாணவர்கள் மறியல்
குளித்தலை அருகே கூடுதல் பஸ் வசதி கேட்டு பள்ளி மாணவர்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பஸ்சில் நெரிசல்
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அய்யனூர் பகுதி பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு போக்குவரத்து பயணத்திற்கு பணிக்கம்பட்டியில் இருந்து குளித்தலை வரை செல்லக்கூடிய அரசு பஸ் ஒன்று இயங்குகிறது. இந்த பஸ் பணிக்கம்பட்டி, வலையப்பட்டி, ஈச்சம்பட்டி, சிவாயம், அய்யனூர், அய்யர்மலை வழியாக குளித்தலை வருகிறது.
இதில் அரசு பள்ளிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்குச் செல்லும் பொதுமக்களும் ஒரே பஸ்சில் பயணிப்பதால் தினந்தோறும் கூட்ட நெரிசலுடன் படியில் தொங்கியபடியே அச்சத்துடன் பயணித்து வருகின்றனர். மேலும் சிவாயம், அய்யனூர் பகுதி மாணவ, மாணவிகள் பஸ் ஏற முடியாத சூழ்நிலையும் ஏற்படுகிறது.
சாலை மறியல்
இதனால் கூடுதல் அரசு பஸ் இயக்க வேண்டுமென வலியுறுத்தி சிவாயம் நெடுஞ்சாலையில் உள்ள அய்யனூரில் பள்ளி மாணவ-மாணவிகளும், ஊர் பொதுமக்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.