அரசு பஸ்சை சிறைபிடித்து பள்ளி மாணவர்கள் மறியல் போராட்டம்
காவேரிப்பாக்கத்தை அடுத்த பாகவெளி கிராமத்தில் கூடுதல் பஸ்கள் இயக்கக்கோரி பள்ளி மாணவர்கள், அரசு பஸ்சை சிறை பிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவேரிப்பாக்கத்தை அடுத்த பாகவெளி கிராமத்தில் கூடுதல் பஸ்கள் இயக்கக்கோரி பள்ளி மாணவர்கள், அரசு பஸ்சை சிறை பிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பஸ் சிறை பிடிப்பு
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த பாகவெளி கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊரிலிருந்து ஏராளமான மாணவ- மாணவிகள் கல்வி பயில்வதற்காக ஆற்காடு மற்றும் விஷாரம் போன்ற நகர பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. முசிறி பகுதியில் இருந்து வாலாஜாவிற்கு அரசு பஸ் தடம் எண் 21 ஏ இயக்கப்பட்டு வருகிறது. ஒரே ஒரு பஸ் மட்டுமே இயக்கப்படுவதாலும், முசிறி, சென்னசமுத்திரம், கடப்பந்தாங்கல், வள்ளுவம்பாக்கம் பெல்லியப்பா நகர் ஆகிய பகுதிகளிலிருந்து ஏராளமான மாணவர்கள் வருவதாலும் கூட்ட நெரிசலில் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த அரசு பஸ் முசிறி பகுதியில் இருந்து பாகவெளி வழியாக, ஒருநாளைக்கு 6 முறை இயக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த அரசு பஸ் நேற்று காலை முசிறி பகுதியில் இருந்து பாகவெளி கிராமத்திற்கு வந்தடைந்தது. அப்போது அங்கு கூடியிருந்த பள்ளி மாணவர்கள் ஒன்று திரண்டு பஸ்சை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர்.
கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
இதுகுறித்து தகவல் அறிந்த காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார், தாசில்தார் ஆனந்தன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மாணவர்களுடன் பேசினர். அப்போது பள்ளி மாணவர்கள் இந்த பஸ்சை மேல்விஷாரம் வரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து போலீசார் ஆற்காடு பணிமனைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் பணிமனை மேலாளர் ஜபார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பள்ளி மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது மாணவர்கள் கோரிக்கையை ஏற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கலைந்து சென்றனர்.