பள்ளி மாணவர்கள் திடீர் மறியல்


பள்ளி மாணவர்கள் திடீர் மறியல்
x

நெல்லை டவுனில் பள்ளி மாணவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை டவுன் ஆர்ச் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் மாவட்ட கல்வி அலுவலகம் அமைந்துள்ளது. இந்த பள்ளி மாணவர்கள் நேற்று ஆர்ச் அருகே எஸ்.என்.ஹைரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை மேற்கு போலீஸ் துணை கமிஷனர் சரவணகுமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பள்ளிக்கூட வளாகத்தில் டவுன் மாநகராட்சி மார்க்கெட் கடைகள் தற்காலிகமாக மாற்றப்பட்டு, செயல்பட்டு வருகிறது. இதனால் மாணவர்களுக்கு விளையாடுவதற்கு போதிய இடம் கிடைக்கவில்லை. கடைகளுக்கு இரவு நேரத்தில் வருவோர் மது அருந்திவிட்டு பள்ளி வளாகத்தில் பாட்டில்களை வீசி செல்கிறார்கள். இந்த பாட்டில் துண்டுகள் மாணவர்களின் கால்களில் குத்தி காயப்படுத்துகிறது. எனவே பள்ளிக்கூட கட்டிடத்தை சுற்றிலும் சுவர் கட்ட வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தினர். மேலும் மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவுப்படி உதவி செயற்பொறியாளர் லெனின் சம்பவ இடத்துக்கு வந்தார். அவர் மாணவர்களின் பாதுகாப்பு கருதி தகர ஷீட்டுகளால் அடைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story