பஸ்களை முறையாக இயக்காததால் பள்ளி மாணவர்கள் அவதி
குன்னூரில் இருந்து கிராமப்புறங்களுக்கு அரசு பஸ்களை முறையாக இயக்காததால் பள்ளி மாணவர்கள் அவதி அடைந்துள்ளனர்.
குன்னூர்,
குன்னூரில் இருந்து கிராமப்புறங்களுக்கு அரசு பஸ்களை முறையாக இயக்காததால் பள்ளி மாணவர்கள் அவதி அடைந்துள்ளனர்.
அரசு பஸ்கள்
நீலகிரி மாவட்டம் மலை மாவட்டமாக இருப்பதால், தனியார் பஸ்கள் இயக்கப்படுவது இல்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள், வேலைக்கு செல்பவர்கள் அரசு பஸ்களை மட்டுமே நம்பி உள்ளனர். ஆனால், அரசு பஸ்கள் நகர்புற பகுதிகளில் இருந்து கிராமங்களுக்கு முறையாக இயக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். குன்னூரில் இருந்து கிராமப்புற பகுதிகளுக்கு 17 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக தூதூர்மட்டம், கொலக்கம்பை உட்லாண்ட்ஸ், ஆர்செடின் போன்ற பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது. இந்த பகுதிகளில் இருந்து தினமும் காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்வோர் என அதிகம் பேர் பயணித்து வருகின்றனர். இதற்கிடையே குன்னூரில் இருந்து 21 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உட்லாண்ட்ஸ் பகுதிக்கு இயக்கப்படும் அரசு பஸ் முறையாக இயக்கப்பட வில்லை.
முறையாக இயக்க வேண்டும்
இதனால் இரவு வரை பள்ளி மாணவ-மாணவிகள் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. இதன் காரணமாக தாமதமாக வரும் பஸ்சில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இருக்கை கிடைக்காமல் பலர் நின்றபடி செல்கின்றனர். மேலும் கிராமங்களில் கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் வனவிலங்குகள் தாக்கும் அபாயம் உள்ளது. சில நேரங்களில் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து கொலக்கம்பைக்கு சென்று அரசு பஸ்சில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, கிராமங்களுக்கு செல்லும் பஸ்களை போக்குவரத்து கழக அதிகாரிகள் முறையாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.