நேரத்திற்கு பஸ்களை இயக்காததால் பள்ளி மாணவர்கள் அவதி
அய்யன்கொல்லி-கூடலூர் இடையே குறிப்பிட்ட நேரத்திற்கு அரசு பஸ்கள் இயக்கப்படாததால், பள்ளி மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர்.
பந்தலூர்,
அய்யன்கொல்லி-கூடலூர் இடையே குறிப்பிட்ட நேரத்திற்கு அரசு பஸ்கள் இயக்கப்படாததால், பள்ளி மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர்.
அரசு பஸ்கள்
பந்தலூர் அருகே அய்யன்கொல்லி, நம்பியார்குன்னு, அம்பலமூலா, நரிக்கொல்லி ஆகிய பகுதிகள் தமிழக-கேரள மாநில எல்லையில் உள்ளன. இதனால் கூடலூரில் இருந்து தேவாலா, பந்தலூர், கொளப்பள்ளி வழியாக அய்யன்கொல்லி, நம்பியார்குன்னுக்கும், பந்தலூர், முக்கட்டி வழியாகவும், நெலாக்கோட்டை, பிதிர்காடு வழியாகவும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த பஸ்களில் அரசு, தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள், கூடலூர் அரசு கலைக்கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், தொழிலாளர்கள் சென்று வருகின்றனர். கேரள மாநில பயணிகளும் பயணித்து வருகிறார்கள். இதற்கிடையே போதிய அளவு பஸ் வசதிகள் இல்லை. இதனால் பயணிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.
மாணவர்கள் அவதி
இதன் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் உரிய நேரத்துக்கு வீடு திரும்ப முடியாமல் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து பயணிகள் கூறும்போது, அய்யன்கொல்லியில் இருந்து கூடலூருக்கு குறைவான அரசு பஸ்களே இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பயணிகள் முண்டியடித்து ஏறுவதோடு, நிற்க கூட இடமில்லாமல் சென்று வருகின்றனர். காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் வீடுகளுக்கு திரும்புகின்றனர்.
மேலும் பஸ்களில் மழைநீர் ஒழுகுவதால், நனைந்தபடி சிரமத்துடன் சென்று வருகின்றனர். கூடலூர் அரசு போக்குவரத்துக்கழக கிளையில் போதிய டிரைவர், கண்டக்டர் இல்லாததால், குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ்கள் இயக்கப்படுவது இல்லை. இதனால் பயணிகள், மாணவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
எனவே, அய்யன்கொல்லியில் இருந்து பந்தலூர், உப்பட்டி, பொன்னானி, அம்பலமூலா வழியாகவும், கூடலூர் நெலாக்கோட்டை, பாட்டவயல் வழியாகவும் கூடுதலாக அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.