தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு


தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு
x
தினத்தந்தி 3 Jan 2023 12:15 AM IST (Updated: 3 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் அரையாண்டு தேர்வு முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்களுக்கு 3-ம் பருவ பாட புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் அரையாண்டு தேர்வு முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்களுக்கு 3-ம் பருவ பாட புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட்டது.

பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டது. அதோடு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையும் வந்தது. இந்தநிலையில் விடுமுறை முடிந்து பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. இதையொட்டி மாணவ-மாணவிகள் பள்ளிக்கு ஆர்வமுடன் புறப்பட்டு சென்றனர்.

குமரி மாவட்டத்திலும் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை அரசு மற்றும் அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் நேற்று திறக்கப்பட்டன. அதே சமயம் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு நேற்று பள்ளிகள் திறக்கப்படவில்லை. அவர்களுக்கு 5-ந் தேதி திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால் குமரி மாவட்டத்தில் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் திருவிழாவையொட்டி 5-ந் தேதி உள்ளூர் விடுமுறை ஆகும். எனவே குமரி மாவட்டத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு 6-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.

புத்தகம் வினியோகம்

இதற்கிடையே 6 முதல் பிளஸ்-2 வரை பள்ளிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து மாணவ-மாணவிகள் வழக்கம்போல பள்ளிக்கு சென்றனர். பெரும்பாலான மாணவ-மாணவிகள் பஸ் மூலமாகவும், சைக்கிளிலும் தாங்கள் படிக்கும் பள்ளிக்கு சென்றதை காணமுடிந்தது. மேலும் பல மாணவ-மாணவிகளை பெற்றோர் அழைத்து வந்து பள்ளியில் விட்டுச் சென்றனர். இதைத் தொடர்ந்து பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு விடைத்தாள்கள் வழங்கப்பட்டன.

மேலும் 6 மற்றும் 7-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மூன்றாம் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட்டன. அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமாக மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது. ஏற்கனவே முதல் 3 மாதங்களுக்கு முதல் பருவ பாட புத்தகங்களும், செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் இரண்டாம் பருவ புத்தகங்களும் வழங்கப்பட்டு பாடம் நடத்தப்பட்டது.

52 ஆயிரம் புத்தகங்கள்

இந்த நிலையில் தற்போது ஜனவரி முதல் மார்ச் வரை மூன்றாம் பருவ பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன. குமரி மாவட்டத்தில் 1 முதல் 7-ம் வரையிலான மாணவர்களுக்கு சுமார் 52 ஆயிரம் புத்தகங்கள் வழங்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story