6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு
குமரி மாவட்டத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்களை பள்ளி ஆசிரியைகள் இனிப்பு வழங்கி வரவேற்றனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்களை பள்ளி ஆசிரியைகள் இனிப்பு வழங்கி வரவேற்றனர்.
பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், பள்ளிகள் திறப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகள் 14-ந் தேதியும் (நாளை), 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பள்ளிகள் 12-ந் தேதியும் (அதாவது நேற்று) திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும், மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 1,230 பள்ளிகள் உள்ளன. இதில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை கற்பிக்கப்படும் 687 பள்ளிகள் திறக்கப்பட்டது.
உற்சாகமாக வந்த மாணவர்கள்
அதைத்தொடர்ந்து மாணவ- மாணவிகள் பள்ளிக்கு உற்சாகமாக வந்தனர். அவர்களை பெற்றோர் மற்றும் உறவினர்கள் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் அழைத்து வந்து விட்டனர்.
ஆட்டோக்கள் மற்றும் பள்ளி வாகனங்களிலும் மாணவ-மாணவிகள் புறப்பட்டு சென்றதையும் காண முடிந்தது.
வரவேற்ற ஆசிரியைகள்
நாகர்கோவில் நகரில் உள்ள பள்ளிகளுக்கு வந்த மாணவ-மாணவிகளை ஆசிரியைகள் பூக்கள் கொடுத்தும், இனிப்பு வழங்கியும் வரவேற்றனர். நாகர்கோவில் கவிமணி பள்ளியில் மாணவிகளுக்கு ஆசிரியர்கள் மாலை அணிவித்து வரவேற்றனர்.
அதைத்தொடர்ந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு நோட்டுகள், புத்தகங்கள் வழங்கப்பட்டன. அதன்பிறகு கோடை விடுமுறையில் நடந்த சம்பவங்களை மாணவ, மாணவிகள் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர்.
1.80 லட்சம் மாணவர்கள் வருகை
மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கான பாடப்புத்தகங்கள், நோட்டுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பே வழங்கப்பட்டு இருந்தன. சில மெட்ரிக் பள்ளிகள் முதல் நாளான நேற்று அரைநாள் மட்டுமே செயல்பட்டன. மற்ற பள்ளிகளில் மாலை வரை வகுப்புகள் நடந்தது.
இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் பள்ளிகள் வழக்கம்போல் முழு நேரமும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாளான நேற்று மாவட்டம் முழுவதும் சுமார் 1.80 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பள்ளிக்கு வந்திருந்ததாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பரபரப்பான சாலைகள்
நாகர்கோவில் நகரின் அனைத்து சாலைகளிலும் வாகன நெருக்கடி அதிகமாக இருந்தது. இதனால் கடந்த ஒரு மாதமாக வெறிச்சோடிக் கிடந்த சாலைகள் நேற்று காலை முதல் பரபரப்பாக காணப்பட்டது. அதிலும் பள்ளிகள் அமைந்திருந்த பகுதிகள் அனைத்திலும் மாணவ- மாணவிகளை பள்ளிக்கு அனுப்பி வைப்பதற்காக வந்திருந்த அவர்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களின் கூட்டம் அளவுக்கதிகமாக இருந்தது. மாவட்டம் முழுவதும் இதேபோன்ற நிலைதான் காணப்பட்டது.