6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் இன்று திறப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படுகிறது.இதை யொட்டி வகுப்பறைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை
தமிழகத்தில் பள்ளிகளில் பொதுத்தேர்வு, ஆண்டு தேர்வு முடிவடைந்ததும் கோடை விடுமுறை விடப்பட்டன. மே மாதம் முடிவடைந்ததும் ஜூன் மாதம் தொடக்கத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதாக இருந்தது. இந்த நிலையில் கோடை வெயிலின் வெப்பதாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிவைக்கப்பட்டது.
அதன்படி 6 முதல் பிளஸ்-2 வகுப்புகளுக்கு ஜூன் 12-ந் தேதியும், 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு 14-ந் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 முதல் பிளஸ்-2 வகுப்புகளுக்கு பள்ளிகள் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படுகிறது. இதையொட்டி அந்தந்த பள்ளிகளில் வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. புதிதாக வர்ணம் பூசும் பணியும் நடைபெற்றது.
விலையில்லா பாடப்புத்தகங்கள்
இதேபோல அரசு பள்ளிகளிலும் தூய்மை பணி, பள்ளி வளாகத்தில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தும், கழிப்பறை, குடிநீர் தொட்டியை சுத்தம் செய்தும் வைத்துள்ளனர். மேலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மாணவ-மாணவிகள் இன்று வகுப்பறைக்கு வந்ததும் அவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படும். மாணவ-மாணவிகளும் ஆர்வமுடன் இன்று பள்ளிக்கு வருகை தருவார்கள். புத்தகப்பை, எழுது பொருட்கள் உள்பட தேவையான பொருட்களை மாணவ-மாணவிகள் புதிதாக வாங்கி வைத்து தயாராக உள்ளனர்.