கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறப்பு
நீலகிரி மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டது. மாணவ-மாணவிகளை ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டது. மாணவ-மாணவிகளை ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்து கடந்த மே 13-ந் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. இந்த விடுமுறைக்கு பின் நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் மற்றும் கூடலூர் கல்வி மாவட்டங்களில் 1 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஊட்டியில் காலை 8 மணி முதல் பள்ளிகளுக்கு மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் வந்தனர். குளிர்ந்த காலநிலை நிலவியதால் சிலர் கம்பளி ஆடைகளை அணிந்தபடி வந்தார்கள். அவர்களை ஆசிரியர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். தொடர்ந்து காலை வணக்கம் கூட்டம் நடந்தது. இதற்காக மாணவ-மாணவிகள் நீண்ட வரிசையில் நின்றனர். இதையடுத்து மாணவர்கள் வகுப்பறைகளில் உள்ள இருக்கைகளில் அமர வைக்கப்பட்டனர். அவர்களுக்கு புத்துணர்ச்சிக்கான வகுப்புகள் எடுக்கப்பட்டது.
பாடப்புத்தகங்கள் வினியோகம்
இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறியதாவது:-
விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பதை முன்னிட்டு, பள்ளிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. குடிநீர், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் உறுதி செய்யப்பட்டு, முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. குன்னூர், கூடலூர் கல்வி மாவட்டங்களில் அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகள் என மொத்தம் 700-க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. இங்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
முதல்நாளான நேற்று பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்தும், கைதட்டியும் ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர். மேலும் இனிப்புகள் வழங்கப்பட்டது. 1 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தங்கள் வழங்கப்பட்டன. கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை மாணவர்கள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஒரு வாரம் புத்துணர்ச்சிக்கான வகுப்புகள் நடத்தப்பட்டு, அடுத்த வாரம் பாடங்கள் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மகிழ்ச்சியாக உள்ளது
இதுகுறித்து மாணவ-மாணவிகள் கூறும்போது, கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்து நண்பர்களை பார்த்தது மகிழ்ச்சியாக உள்ளது. 2 ஆண்டுகளுக்கு பின்னர் பள்ளிகள் வழக்கம்போல் ஜூன் மாதம் திறக்கப்பட்டு இருக்கிறது. நேரடி வகுப்புகள் மூலம் பாடம் கற்றால் எளிதாக புரிவதோடு, அதிக மதிப்பெண்கள் எடுக்க முடியும் என்றனர்.