மழை வெள்ளம் விடுமுறையை ஈடுசெய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும்
சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களையொட்டிய பகுதிகளை கடந்த மாதம் (டிசம்பர்) 4-ந்தேதி மிக்ஜம் புயல் தாக்கி யது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்தது.
சென்னை,
சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களையொட்டிய பகுதிகளை கடந்த மாதம் (டிசம்பர்) 4-ந்தேதி மிக்ஜம் புயல் தாக்கியது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட் டங்களில் கனமழை பெய்தது. இதில் சென்னையில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளநீர் பாதிப்பால் மூழ்கிப் போயின. இதனால் பள்ளிகளுக்கு அப்போது விடுமுறைகள் விடப்பட்டன.
இந்த நிலையில் அந்த விடுமுறைகளை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் சென்னையில் உள்ள பள்ளிகள் செயல்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனைத்து வகை பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மிக்ஜம் புயல் மற்றும் வெள்ளம் காரணமாக சென்னை மாவட்டத்தின் அனைத்து வகை தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.
எனவே அந்த விடுமுறை நாட்களை ஈடுசெய்யும் வகையில் 6.1.2024, 20.1.2024, 3.2.2024, 17.2.2024 ஆகிய சனிக்கிழமைகளில் முறையே திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை, வியாழக்கிழமை பாடவேளைகளை பின்பற்றி பள்ளிகள் முழு நேரமாக செயல்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.