விபத்துகளை தடுக்க விஞ்ஞான ரீதியில் வியூகம்: போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு ஐ.ஐ.டி.யில் 3 நாள் பயிற்சி
விபத்துகளை தடுக்க விஞ்ஞான ரீதியில் வியூகம் அமைக்கும் வகையில் சென்னை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ஐ.ஐ.டி.யில் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.
சென்னை,
சென்னை மாநகரில் பெருகி வரும் வாகனங்களால் சாலை விபத்துகளை தடுக்கும் நடவடிக்கைகளில் போக்குவரத்து போலீசார் சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றனர். 'சாலைவிதிகளை மதித்தால் விபத்துகளில் இருந்து தப்பிக்கலாம்' என்ற தாரக மந்திரத்துடன் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நடவடிக்கைகள் காரணமாக கடந்த ஆண்டு 347 ஆக இருந்த சாலை விபத்து உயிரிழப்புகள் இந்த ஆண்டு 330 ஆக குறைந்துள்ளது. இந்த நிலையில் விபத்துகளை மேலும் தடுக்க விஞ்ஞான ரீதியில் காரணங்களை ஆராய்ந்து, அதனடிப்படையில் சாலை விபத்துகளையும், விபத்தால் நேரிடும் உயிரிழப்புகளையும் வெகுவாக குறைக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து சென்னை ஐ.ஐ.டி.யுடன் இணைந்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு 3 நாள் சிறப்பு பயிற்சி முகாம் போக்குவரத்து போலீசார் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி.யில் இந்த முகாமை சென்னை போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் தொடங்கி வைத்தார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
இந்த பயிற்சி முகாமில், சென்னை போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர்கள் 25 பேருக்கு விஞ்ஞான முறையில் விபத்துக்கான காரணங்களை கண்டுபிடித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது எப்படி என்பது குறித்து ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. விபத்துகளை ஏற்படுத்துவதில் வாகனம், ஓட்டுனரின் பங்கு என்ன, சாலையின் நிலை, சி.சி.டி.வி. காட்சிகளில் பதிவாகும் விபத்து காட்சிகளை அடிப்படையாக வைத்து எவ்வாறு துப்பு துலக்குவது, விசாரணை மேற்கொள்வது, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விழிப்புணர்வு மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் போக்குவரத்து இணை கமிஷனர்கள் அபிஷேக் தீக்சித், மயில்வாகனன், உதவி கமிஷனர் பாஸ்கரன், சென்னை ஐ.ஐ.டி. சாலை பாதுகாப்பு சிறப்பு மையத்தைச் சேர்ந்த பேராசிரியர் வெங்கடேஷ் பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.