கலை படிப்புகளை காட்டிலும் அறிவியல் சார்ந்த கல்வியே தற்போதைய தேவையாக உள்ளது - கவர்னர் ஆர்.என்.ரவி
கலை படிப்புகளை காட்டிலும் அறிவியல் சார்ந்த கல்வியே தற்போதைய தேவையாக உள்ளது என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
மாணவிகளுடன் கலந்துரையாடல்
இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழாவையொட்டி, இந்தியா முழுவதும் உள்ள 75 பள்ளிகளில் இருந்து 750 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் இணைந்து 8.7 கிலோ எடையுள்ள செயற்கைக் கோளை வடிவமைத்தனர். ஆசாதிசாட்-2 என்ற பெயர் கொண்ட அந்த செயற்கைக் கோள் கடந்த பிப்ரவரி 10-ந் தேதி விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த 750 மாணவிகளுக்கும் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா என்ற நிறுவனம் தொழில்நுட்ப உதவிகளைச் செய்திருந்தது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு மாணவிகள் இடம் பெற்றிருந்தனர். அவர்களுடன் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துரையாடும் நிகழ்ச்சி நேற்று சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சென்னை வேளச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளி, நேரு மேல்நிலைப் பள்ளி, கோடம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி, பெரம்பூர் சென்னை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தர்மபுரி அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மதுரை திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சிவகாசி அரசு மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் இருந்து 130 மாணவிகள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
விண்வெளியின் பயன்பாடு
இந்த நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-
அண்ட சராசரங்களை கவனிக்கும் போது பூமி ஒரு தூளாக உள்ளது. ஆனால் விண்வெளி நமது வாழ்க்கையில் முக்கிய இடம் பெற்று வருகிறது. நம் அன்றாட வாழ்க்கையில் விண்வெளியின் பயன்பாடு மிக அதிகமாக உணரப்படுகிறது.
தொலைதொடர்பு, வேளாண்மை, கட்டுமானம், காலநிலை நிலவரம் உள்பட ஏராளமான தொழில்நுட்பங்களுக்கு விண்வெளி மற்றும் செயற்கைகோள்களின் பயன்பாடு இன்றியமையாததாக உள்ளது. விண்வெளி தொழில்நுட்பத்தில், வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா மிகவும் முன்னோடியாக உள்ளது. விண்வெளி மற்றும் செயற்கைகோள் குறித்து சாதாரண மாணவ, மாணவிகளும் தெரிந்து கொள்ள வேண்டும்.
அறிவியல் சார்ந்த கல்வி
செயற்கைகோளை உருவாக்கிய மாணவிகளுக்கு தற்போது இதுதொடர்பான தொழில்நுட்பத்தில் ஒரு ஊக்கம் கிடைத்திருக்கும். அவர்கள் இனி அதில் வளர வேண்டும். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தால்தான் இன்று உலக நாடுகள் முன்னேறி வருகின்றன. தொழில்நுட்பம் இல்லாத நாடுகள் ஒதுக்கப்படுகின்றன. நமது நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னோடியாக திகழ்கிறது.
இந்தியாவில் ஆயிரம் பல்கலைக்கழகங்கள், 40 ஆயிரம் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 70 சதவீதம் கலை சார்ந்த படிப்புகளே உள்ளன. கலை சார்ந்த படிப்புகளை மோசமானவை என்று நான் கூறமாட்டேன். அறிவியல் சார்ந்த கல்வியே இன்றைய தேவையாக உள்ளது. தமிழகத்தில், 74 சதவீதம் மாணவர்கள் தனியார் பள்ளிகளிலும், 26 சதவீதம் மாணவர்கள் அரசு பள்ளிகளிலும், மேல் நிலைப் படிப்புகளை படிக்கின்றனர்.
தேசிய கல்விக் கொள்கை
செயற்கைகோளை உருவாக்க அரசு பள்ளி மாணவிகளை ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பு ஊக்கப்படுத்தி உள்ளது. அரசு பள்ளி மாணவர்கள் இதுபோன்ற மேலும் நிறைய பங்களிப்புகளை தனியார் பள்ளி மாணவர்களையும் கடந்து வழங்க முடியும். இன்றைய கல்வித் தேவைக்கு தேசிய கல்விக் கொள்கை அவசியமாக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் கவர்னரின் முதன்மைச் செயலாளர் ஆனந்த்ராவ் பாட்டீல், ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீமதி கேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாணவிகள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதிலளித்தார். பின்னர் மாணவிகள் அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்களை அவர் வழங்கினார்.