ரூ.11½ கோடியில் அறிவியல் பூங்கா; முதல்-அமைச்சர் விரைவில் திறப்பார்
ரூ.11½ கோடியில் அறிவியல் பூங்கா; முதல்-அமைச்சர் விரைவில் திறப்பார்
தஞ்சை அருளானந்த நகரில் ரூ.11½ கோடியில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் பூங்காவை விரைவில் முதல்-அமைச்சர் திறந்து வைப்பார் என்று மேயர் சண்.ராமநாதன் கூறினார்.
அறிவியல் பூங்கா
தஞ்சை மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தஞ்சை அருளானந்த நகரில் 2.5 ஏக்கர் பரப்பளவில் அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் பூங்கா (ஸ்டெம் பூங்கா) அமைக்கப்பட்டு வருகிறது. ரூ.11கோடியே 50 லட்சம் செலவில் இந்த பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த பூங்காவின் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் அறிவியல் பூங்காவை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
95 சதவீதம் பணிகள் நிறைவு
தஞ்சை மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.11 கோடியே 50 லட்சம் செலவில் ஸ்டெம் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை 95 சதவீதம் பணிகள் முடிவடைந்து இதர பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணி அடுத்த மாதத்தில் முடிவடைந்து பொதுமக்கள், மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது.
இந்த ஸ்டெம் பூங்காவை விரைவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார். தற்போது மாணவ-மாணவிகள் ஆன்லைன் விளையாட்டில் மூழ்கி கவனத்தை சிதற விடுகின்றனர். இதனால் அவர்களின் படிப்பும் பாதிக்கப்படுகிறது. அந்த எண்ணத்தை ஸ்டெம் பூங்கா மாற்றும். இந்த பூங்காவுக்கு மாணவர்கள் வருவதன் மூலம் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் சார்ந்த அறிவு வளர்ச்சி மேலும் அவர்களுக்கு வளரும். இங்குள்ள கோளரங்கம், ராக்கெட் தளம் உள்ளிட்ட பல வகைகள் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
கவன சிதறல் தடுக்கப்படும்
இந்த பூங்காவால் மாணவர்களின் கவன சிதறல் தடுக்கப்படும். அவர்களின் படிப்பிருக்கும் மிகவும் உறுதுணையாக இந்த பூங்கா அமையும். எனவே திறப்பு விழா முடிந்த பிறகு பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை கண்டிப்பாக பூங்காவுக்கு அழைத்து வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர் ரமேஷ், மண்டல குழு தலைவர் ரம்யா சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.