என்ஜினீயரிங் மாணவருக்கு அரிவாள் வெட்டு
மானூர் அருகே, என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் அரிவாளால் வெட்டப்பட்டார். இதில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலைமறியலுக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மானூர்:
மானூர் அருகே, என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் அரிவாளால் வெட்டப்பட்டார். இதில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலைமறியலுக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மாணவர்
நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள இரண்டும்சொல்லான் என்ற ஊரில், ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் வைத்திருந்த பிளக்ஸ் போர்டில் சிலர் அவமதிப்பு செய்திருந்தார்களாம்.
அதை செய்தவர்கள் மற்றொரு தெருவை சேர்ந்த மற்றொரு தரப்பை சேர்ந்தவர்கள் என்ற எண்ணம் ஒரு தரப்பை சேர்ந்தவர்களிடம் இருந்துள்ளது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் அதே ஊரைச் சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் ஆரோன் (வயது 21) மற்றும் அவரது உறவினர் ஆபிரகாம் (19) ஆகிய இருவரும் ஊருக்கு வடக்கே உள்ள கிணற்றில் குளித்துவிட்டு நடந்து வந்து கொண்டிருந்தனர்.
அரிவாள் வெட்டு
அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்தவர் கீழே தடுமாறி விழுந்துள்ளார். கீழே விழுந்தவரை இருவரும் தூக்கி விட்டுள்ளனர். அவர் உங்களுக்கு எந்த தெரு? என கேட்டுள்ளார். அவர்கள் தெரு பெயரை கூறிவிட்டுச் சென்றுள்ளனர். அவர்களை பின்தொடர்ந்து சென்ற மோட்டார்சைக்கிளில் வந்து கீழே விழுந்தவர், மேலும் சிலருடன் சென்று அங்குள்ள அம்மன் கோவில் முன்பு வைத்து ஆரோனை அரிவாளால் வெட்டி உள்ளார். இதில் ஆரோனுக்கு வலது தோள்பட்டையில் வெட்டு விழுந்துள்ளது.
அப்போது ஆரோன் சத்தம் போடவே அவர்கள் கொலை மிரட்டல் விடுத்தபடி சென்றனர்.
பேச்சுவார்த்தை
இதுபற்றி தகவல் அறிந்த மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார், காளியப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காயம் அடைந்த ஆரோனை 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து ஆரோனின் உறவினர்கள் அழகிய பாண்டியபுரம் மெயின் ரோட்டிற்கு வந்து குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் செய்ய முயன்றனர். தாழையூத்து துணை சூப்பிரண்டு ஆனந்தராஜ் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தார்.
போலீஸ் பாதுகாப்பு
இது தொடர்பாக சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து கல்லூரி மாணவர் ஆரோன் கொடுத்த புகாரின் பேரில் கொலை முயற்சி மற்றும் தீண்டாமை பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.இதைத்தொடர்ந்து இரண்டும் சொல்லான் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.