ஸ்கூட்டர்-மொபட் மோதல்; கட்டுமான நிறுவன நிர்வாகி சாவு


ஸ்கூட்டர்-மொபட் மோதல்; கட்டுமான நிறுவன நிர்வாகி சாவு
x

ஸ்கூட்டர்-மொபட் மோதியதில் கட்டுமான நிறுவன நிர்வாகி உயிரிழந்தார்.

பெரம்பலூர்

வேப்பந்தட்டை தாலுகா அனுக்கூரை சேர்ந்தவர் ஆத்மநாதன் என்ற மணிகண்டன் (வயது 55). பெரம்பலூர் தபால் நிலையத்தெருவில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த இவர், சுந்தர்நகரில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் நிர்வாகியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு அனு என்ற மனைவியும், தர்ஷன் என்ற மகனும் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சியில் நடந்த தனது சகோதரியின் வீட்டு விசேஷத்திற்கு தனது ஸ்கூட்டரில் சென்றுவிட்டு, பின்னர் பெரம்பலூருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். திருச்சி-சென்னை புறவழிச்சாலையில் சிறுவாச்சூரில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருவதால், அணுகுசாலையில் மணிகண்டன் வந்தார்.

அப்போது, எதிரே முதியவர் ஒருவர் தனது மொபட்டில் திடீரென்று குறுக்கே வந்துள்ளார். அப்போது மணிகண்டனின் ஸ்கூட்டரும், முதியவரின் மொபட்டும் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இதில் படுகாயமடைந்து திருச்சி தனியார் மருத்துவமனையிலும், பின்னர் இருங்களூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மணிகண்டன், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று மாலை பிரேத பரிசோதனைக்கு பிறகு மணிகண்டனின் உடலை அவரது குடும்பத்தினரிடம் போலீசார் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுவாச்சூர் பகுதியில் திருச்சி-சென்னை புறவழிச்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி மிகவும் தாமதமாக நடந்து வருகிறது. சுமார் 5 ஆண்டுகளாக மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருவதால், அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, இதுபோன்று விபத்துகள் அடிக்கடி நடந்து உயிரிழப்புகள் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது. எனவே அந்த பணிகளை விரைந்து முடிக்க வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story