புகார் மனுக்கள் குறித்த ஆய்வு கூட்டம்: பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை முற்றிலும் தடுக்க வேண்டும்-மாநில மகளிர் ஆணைய தலைவர் அறிவுறுத்தல்


புகார் மனுக்கள் குறித்த ஆய்வு கூட்டம்: பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை முற்றிலும் தடுக்க வேண்டும்-மாநில மகளிர் ஆணைய தலைவர் அறிவுறுத்தல்
x

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் ஏ.எஸ்.குமாரி அறிவுறுத்தி உள்ளார்.

சேலம்

ஆய்வு கூட்டம்

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் மூலம் நடவடிக்கைக்காக சேலம் மாவட்டத்திற்கு அனுப்பப்பட்ட மனுக்கள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமாரி தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் கார்மேகம் முன்னிலை வகித்தார்.

இந்த கூட்டத்தில், சேலம் மாவட்டத்தில் இருந்து தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்திற்கு பெறப்பட்ட புகார் மனுக்களில் நிலுவையில் உள்ள மனுக்கள் குறித்து அனைத்து துறை தலைவர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமாரி பேசியதாவது:-

பெண்களின் உரிமைகள்

பெண்களின் நலன் மற்றும் மேம்பாடு தொடர்பான அனைத்து அம்சங்களிலும் மாநில மகளிர் ஆணையம் முக்கிய பங்காற்றி வருகிறது. மாநில மகளிர் ஆணையத்தின் முக்கிய நோக்கம் பெண்களின் உரிமைகளை பாதுகாத்தல், பெண்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கான திட்டங்களை முன்னெடுத்தல், பெண் கல்வி, பெண்களின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை பெண்களுக்கு முழுமையாக வழங்கிட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் குழந்தை திருமணம் தடுப்பு, பெண் பாலியல் வன்கொடுமை தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.

பாலியல் வன்கொடுமை

மேலும், பணிபுரியும் இடத்தில் பாலியல் தொந்தரவு குறித்து பெறப்பட்ட புகார் மனுக்கள் குறித்து, புகார் குழு உறுப்பினர்களுடன் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் உள்ள பெண் வார்டு உறுப்பினர்களுடன் பெண்களுக்கான உதவி எண், குழந்தைகளுக்கான உதவி எண் மற்றும் குழந்தை திருமணம் தடுப்பு குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை முற்றிலும் தடுக்க வேண்டும். பெண் கல்வியை ஊக்குவிப்பதற்கும், குழந்தை திருமணம், குடும்ப வன்முறை போன்றவற்றை முற்றிலும் தடுப்பதற்கும், பெண்களின் முன்னேற்றத்திற்கு உதவுவதற்கும் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும்.

இவ்வாறு ஏ.எஸ்.குமாரி பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, மாவட்ட சமூக நல அலுவலர் ரஞ்சிதாதேவி, போலீஸ் துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன், மகளிர் திட்ட அலுவலர் பெரியசாமி உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story