குமரி போலீசாருக்கு 'ஸ்கூபா டைவிங்' செயல்விளக்க பயிற்சி


குமரி போலீசாருக்கு ஸ்கூபா டைவிங் செயல்விளக்க பயிற்சி
x
தினத்தந்தி 12 April 2023 12:15 AM IST (Updated: 12 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நீர்நிலைகளில் விபத்துகளில் சிக்கும் மக்களை மீட்க குமரி போலீசாருக்கு ஸ்கூபா டைவிங் செயல்விளக்க பயிற்சி போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் மேற்பார்வையில் நடந்தது.

ஸ்கூபா டைவிங்

கடல், ஏரி, குளம், கிணறு ஆகிய நீர்நிலைகளில் ஏற்படும் விபத்துகளில் சிக்கிக் கொள்ளும் பொதுமக்களை மீட்க ஸ்கூபா டைவிங் என்ற பயிற்சி போலீசாருக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி குமரி மாவட்ட போலீசாருக்கும் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக அதிரடிப்படை மற்றும் ஆயுதப்படையில் இருந்து 5 பெண் போலீசார் உள்பட 15 போலீசார் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் தொடங்கிய இந்த பயிற்சியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தொடங்கி வைத்தார். முதல் நாளான நேற்று முன்தினம் ஸ்கூபா டைவிங் உபகரணங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று பயிற்சி அளிக்கப்பட்டது.

செயல்முறை பயிற்சி

2-வது நாளான நேற்று நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் உள்ள நீச்சல் குளத்தில் ஸ்கூபா டைவிங் செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியை தனியார் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் அளித்தனர். ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்ட உபகரணங்களை அணிந்து கொண்டு எவ்வாறு தண்ணீரில் நீந்த வேண்டும், நீரோட்டத்தை உணர்ந்து கொள்வது எப்படி? என்பன போன்ற பயிற்சிகள் செயல்விளக்கத்துடன் செய்து காண்பிக்கப்பட்டது. இந்த பயிற்சி நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் மேற்பார்வையில் நடந்தது.

வரும் நாட்களில் கடல், கிணறு, குளம், ஆறு போன்ற ஆழமான நீர் நிலைகளில் இந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story