விவசாயி உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு
விவசாயி உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டிய தந்தை- மகனை போலீசார் கைது செய்தனர்
திருவோணம் அருகே கோவில் தகராறில் விவசாயி உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டிய தந்தை- மகனை போலீசார் கைது செய்தனர்.
கோவில் தகராறு
தஞ்சை மாவட்டம் திருவோணத்தை அடுத்துள்ள நெய்வேலி வடபாதி நரிபத்தை கிராமத்தில் உள்ள ஒரு கோவிலில் திருவிழா நடத்துவது சம்பந்தமான வேலைகளை செய்துக்கொண்டிருந்த போது அதே கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் (வயது45) விவசாயி என்பவருக்கும், ரவி (60) என்பவருக்கும் இடையே கடந்த 20-ந்தேதி வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
3 பேருக்கு அரிவாள் வெட்டு
மறுநாள் இது தொடர்பாக மீண்டும் சிவகுமாருக்கும், ரவிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ரவி அவரது மகன்கள் ஜெயபால் (38), இளையபாரதி (28) ஆகிய மூவரும் சேர்ந்து சிவக்குமார், அவரது தம்பி ராஜேஷ் (40), சிவக்குமாரின் அக்கா மகன் சபரிநாதன் (25) ஆகிய 3 பேரையும் அரிவாளால் வெட்டி, இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த சிவக்குமார் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியிலும், காயமடைந்த ராஜேஷ் மற்றும் சபரிநாதன் ஆகிய இருவரும் பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தந்தை-மகன் கைது
இதுகுறித்து சிவக்குமார் கொடுத்த புகாரின் பேரில் வாட்டாத்திக்கோட்டை போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து ரவி, அவரது இளைய மகன் இளையபாரதி ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஜெயபாலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.