அண்ணன்-தம்பிக்கு அரிவாள் வெட்டு
அண்ணன், தம்பியை அரிவாளால் வெட்டிய ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே ஜம்படை கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 23). அதேபோல் சித்தப்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் சூர்யா (24). இவர்கள் 2 பேரும் மணலூர்பேட்டையில் ஆட்டோ ஓட்டி வருகின்றனர். இந்த நிலையில் இவர்கள் 2 பேருக்கும் இடையே தொழில் போட்டி காரணமாக முன்விரோதம் இருந்துவந்துள்ளது. சம்பவத்தன்று மணலூர்பேட்டையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே ரங்கநாதனும் அவரது அண்ணன் ராதாகிருஷ்ணனும் மது குடித்து கொண்டு இருந்ததாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த சூர்யா, ரங்கநாதனை ஆபாசமாக திட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சூர்யா தனது ஆட்டோவில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ரங்கநாதனை வெட்டினார். அதனை தடுக்க வந்த ராதாகிருஷ்ணனையும் அவர் வெட்டியதாக தெரிகிறது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்த புகாரின் பேரில் மணலூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து சூர்யாவை கைது செய்தனர்.