ரவுடிக்கு அரிவாள் வெட்டு
பாளையங்கோட்டையில் ரவுடியை அரிவாளால் வெட்டிய வழக்கில் பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பாளையங்கோட்டையில் ரவுடியை அரிவாளால் வெட்டிய வழக்கில் பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரவுடி
நெல்லை மேலப்பாளையம் பங்காளப்பா தெருவை சேர்ந்தவர் அஜ்மீன். இவருடைய மகன் கஜா என்ற கடாகஜா (வயது 34). இவர் மீது மேலப்பாளையம், சுத்தமல்லி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி வழக்குகள், கஞ்சா வழக்குகள் உள்பட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவரை போலீசார் 2008-ல் இருந்து ரவுடி பட்டியலில் சேர்த்து கண்காணித்து வருகின்றனர்.
இவர் நேற்று முன்தினம் பாளையங்கோட்டை சித்தா கல்லூரி அருகே லங்கர்கானா தெருவில் தனது நண்பரான சுந்தர் என்பவரிடம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு கடாகஜாவிற்கு அறிமுகமான தூத்துக்குடி கிருஷ்ணாபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த விநாயகம் மனைவி பிரேமவள்ளி (45) வந்தார்.
அரிவாள் வெட்டு
அவர், சுந்தரிடம் கடாகஜா தன்னை பற்றி தான் ஏதோ அவதூறு பேசுகிறார் என்று நினைத்து கடாகஜாவிடம் தகராறு செய்துள்ளார். மேலும் தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் முத்துகுமாரை (32) அழைத்து வந்து கடாகஜாவிடம் மீண்டும் தகராறு செய்துள்ளார்.
அப்போது ஆத்திரம் அடைந்த முத்துகுமார் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கடாகஜாவை தலையில் வெட்டிவிட்டு தப்பிச்சென்றார். இதுகுறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கடாகஜாவை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
2 பேர் கைது
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேமவள்ளி, முத்துகுமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர். முத்துகுமார் மீது தூத்துக்குடி சிப்காட் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே பாளையங்கோட்டையில் ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக வந்த புகாரின் பேரில் நெல்லை அனைத்து மகளிர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பிரேமவள்ளி இளம் பெண்களை வைத்து விபசாரம் செய்து வந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேமவள்ளி மற்றும் அவருக்கு உதவியாக இருந்ததாக திருத்து பகுதியை சேர்ந்த கருப்பையா மகன் சுடலைமுத்து (38) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.