இடப்பிரச்சினையில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு
நீடாமங்கலம் அருகே இடப்பிரச்சினை காரணமாக வாலிபரை அரிவாளால் வெட்டிய ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
நீடாமங்கலம்:
நீடாமங்கலம் அருகே இடப்பிரச்சினை காரணமாக வாலிபரை அரிவாளால் வெட்டிய ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
இடப்பிரச்சினை
நீடாமங்கலம் காவல் சரகம் நகர் கீழத்தெருவில் வசிப்பவர் ராஜேஷ் (வயது 24). இவருக்கும் இவரது சித்தப்பா சின்னராஜா என்பவருக்கும் இடையே இடப்பிரச்சினை இருந்து வந்தது. சம்பவத்தன்று இவர்களது குடும்பத்தினரிடையே வாய்த்தகராறு முற்றியது.
இதில் ஆத்திரமடைந்த சின்னராஜாவின் மைத்துனர் தர்மதுரை என்பவர் ராஜேசின் இடது கால் முட்டியில் அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் காயமடைந்த ராஜேஷ் நீடாமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஒருவர் கைது
இதுகுறித்து ராஜேஷ் நீடாமங்கலம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இது தொடர்பாக நகர் கிராமத்தை சேர்ந்த தர்மதுரை, சக்திவேல், ரவிசங்கர் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரவிசங்கரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள தர்மதுரை, சக்திவேல் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.