தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு; 6 பேர் கைது


தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு; 6 பேர் கைது
x

கூடங்குளம் அருகே தகராறை தட்டி கேட்ட தொழிலாளியை அரிவாளால் வெட்டிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

திருநெல்வேலி

கூடங்குளம்:

கூடங்குளம் அருகே தகராறை தட்டி கேட்ட தொழிலாளியை அரிவாளால் வெட்டிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

மெக்கானிக்

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள ஸ்ரீரங்கநாராயணபுரத்தைச் சேர்ந்தவர் தங்கத்துரை மகன் ஜெகன் (வயது 38). மெக்கானிக்கான இவர் அப்பகுதியில் மோட்டார் சைக்கிள் பழுதுபார்க்கும் கடை நடத்தி வருகிறார்.

கூடங்குளம் அணுமின்நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் வாகனங்களை இயக்கி வரும் தனியார் நிறுவனத்தின் சூப்பர்வைசர் தனது மோட்டார் சைக்கிளை பழுது பார்ப்பதற்காக ஜெகனின் கடையில் விட்டு சென்றார்.

அந்த மோட்டார் சைக்கிளை பழுது பார்த்த பின்னர், அதனை எடுத்து செல்வதற்காக நேற்று முன்தினம் இரவில் சூப்பர்வைசர் தன்னுடன் பணியாற்றும் 2 ஊழியர்களை அனுப்பி வைத்தார்.

அரிவாள் வெட்டு

இந்த நிலையில் மோட்டார் சைக்கிளை எடுக்க வந்த 2 ஊழியர்களும் மதுபோதையில், 'மோட்டார் சைக்கிளை சரியாக பழுது நீக்கவில்லை' என்று கூறி ஜெகனிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனை ஜெகனின் உறவினரும், கூலி தொழிலாளியுமான பால்ராஜ் (44) தட்டி கேட்டார்.

பின்னர் அங்கிருந்த சென்ற 2 ஊழியர்களும் தங்களுடன் பணியாற்றும் மேலும் 4 பேரை அழைத்து வந்தனர். அவர்கள் அரிவாள், கத்தியுடன் வந்து பால்ராஜை சரமாரியாக வெட்டினர். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். உடனே அங்கிருந்த 6 பேரும் தப்பி சென்றனர். படுகாயம் அடைந்த பால்ராஜை நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சாலைமறியல்

இதையடுத்து பால்ராைஜ அரிவாளால் வெட்டிய கும்பலை கைது செய்ய வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பா.ஜ.க. மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனால் கூடங்குளம்- நாகர்கோவில் மெயின் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களிடம் கூடங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சாலைமறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

6 பேர் கைது

பால்ராஜை அரிவாளால் வெட்டியது தொடர்பாக கூடங்குளம் அணுமின்நிலைய ஒப்பந்த நிறுவன ஊழியர்களான கன்னியாகுமரி மாவட்டம் நரிகுளத்தைச் சேர்ந்த ராஜன் மகன் சிவசங்கர் (33), வட்டவிைளயைச் சேர்ந்த மோகன் மகன் முருகேஷ் (25), மேல கிருஷ்ணன் புதூரைச் சேர்ந்த செல்வின் மகன் தாணு (23), செங்கம்புதூரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் பிரபு (22), அம்பலபதியைச் சேர்ந்த ராஜகோபால் மகன் அகில மாதவன் (33) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story