தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு; வாலிபர் கைது
தொழிலாளியை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பேட்டை:
நெல்லை அருகே உள்ள நரசிங்கநல்லூர் ஜீவா காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 55), கூலி தொழிலாளியான இவரது மகன் ராசுகுட்டி, மருமகன் மாவீரன். இவர்கள் 2 பேரும் சேர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து (32) என்பவரின் தம்பி செல்வத்திடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. தகராறு முற்றவே ராசுகுட்டி, மாவீரன் ஆகியோர் சேர்ந்து செல்வத்தின் கையை கடித்து காயப்படுத்தினர்.
இந்த நிலையில் நேற்று மதியம் கிருஷ்ணமூர்த்தியை வழிமறித்து இசக்கிமுத்து தகராறு செய்தார். பின்னர் தான் வைத்து இருந்த அரிவாளால் கிருஷ்ணமூர்த்தியை வெட்டியதாக கூறப்படுகிறது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து, இசக்கிமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.