ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 ஆயிரம் படகுகள் நிறுத்தம்


தொடரும் கடல் சீற்றத்தால் ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 ஆயிரம் படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

தொடரும் கடல் சீற்றத்தால் ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 ஆயிரம் படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன.

கடல் சீற்றம்

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. கடலோர பகுதிகளில் இன்னும் சில நாட்களுக்கு பலத்த சூறாவளி காற்று வீசும், கடல் சீற்றமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையத்தால் எச்சரிக்கப்பட்டு உள்ளது.

ராமேசுவரம் பகுதியில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றமாக காணப்பட்டு வருகிறது. இதனால் ராமேசுவரம் பகுதியில் 4-வது நாளாக விசைப்படகு மற்றும் நாட்டுபடகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல மீன் துறை அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்டது.

4 ஆயிரம் படகுகள் நிறுத்தம்

இதனால் துறைமுக கடல் பகுதியில் 800-க்கும் அதிகமான விசைப்படகு மற்றும் 400-க்கும் மேற்பட்ட நாட்டு படகுகளும் மீன் பிடிக்க செல்லாமல் கரையோரத்தில் உள்ள கடல் பகுதியில் பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதேபோல் பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை.

கடல் சீற்றத்தால் தனுஷ்கோடி எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் உள்ள மீன் பிடி துறைமுகத்தில் மோதி கடல் அலைகள் பல அடி உயரத்திற்கு சீறி எழுந்து வருகின்றன.

பாதுகாப்பு கருதி துறைமுக பகுதிக்குள் சுற்றுலா பயணிகள் செல்ல போலீசாரால் தடை விதிக்கப்பட்டு அங்கு தடுப்பு கம்புகளும் வைக்கப்பட்டு உள்ளன. ஆனால் நேற்று வந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் அந்த தடுப்புகளை அகற்றிவிட்டு துறைமுக பகுதிக்குள் உள்ளே சென்று கடல் அலை சீறி எழுவதை மிக அருகில் நின்று செல்பி எடுத்தபடி ஆபத்தான முறையில் வேடிக்கை பார்த்தனர். போலீசார், சுற்றுலா பயணிகளை எச்சரித்து அனுப்பி வைத்த வண்ணம் இருந்தனர்.


Related Tags :
Next Story