மண்டபம் பகுதியில் கடல் அரிப்பை தடுக்க பிரத்தியேக கற்கள்
கடல் அரிப்பால் ஏற்படும் பாதிப்பை தடுக்க மண்டபம் தெற்கு கடற்கரை பகுதியில் பிரத்தியேக கற்கள் அமைக்கப்படுகின்றன. இந்த கற்களை தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.
பனைக்குளம்,
கடல் அரிப்பால் ஏற்படும் பாதிப்பை தடுக்க மண்டபம் தெற்கு கடற்கரை பகுதியில் பிரத்தியேக கற்கள் அமைக்கப்படுகின்றன. இந்த கற்களை தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.
கடல் அரிப்பு
தமிழகத்தில் நீண்ட கடற்கரை பகுதிகளை கொண்டது ராமநாதபுரம் மாவட்டம். அதுபோல் மண்டபம் தென்கடல் பகுதியில் புயல் மற்றும் மழைக்கால சீசனில் வீசும் பலத்த சூறாவளி காற்று, கடல் சீற்றத்தாலும், கடல் அரிப்பாலும் கடற்கரை பகுதி முழுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.
மேலும் தென்கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்படும் மீன்பிடி படகுகளும் நங்கூரகயிறு அறுந்து கரை ஒதுங்கும் நிகழ்வுகளும் அடிக்கடி நடக்கின்றன.
தடுப்பு கற்கள்
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தெற்கு கடல் பகுதியில் கடல் சீற்றத்தின் வேகம் மற்றும் கடல் அரிப்பால் ஏற்படும் பாதிப்பை தடுக்கும் வகையில் மீன்வளத்துறை மூலம் ரூ.50 கோடி நிதியில் தடுப்பு கற்கள் அமைக்கப்படுகின்றன. அதற்காக மண்டபம் தமிழ்நாடு ஓட்டல் பின்பகுதியில் உள்ள கடற்கரை பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த பிரத்தியேக தடுப்பு கற்கள் அமைக்கப்பட உள்ளன.
இது பற்றி மீன் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
மண்டபத்தில் கடல் அரிப்பை தடுக்க ரூ.50 கோடி நிதியில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு தடுப்பு கற்கள் அமைக்கப்பட உள்ளன. அதற்காக அந்த கற்கள் தற்போது கடற்கரை பகுதியில் வைத்து தயார் செய்யப்பட்டு வருகின்றன. விரைவில் கடற்கரை பகுதி முழுவதும் இந்த கற்கள் வரிசையாக போடப்பட்டு தடுப்புச் சுவர் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.