சென்னை-கன்னியாகுமரி கப்பல் போக்குவரத்து:கடல்வழி பயணம் காலத்தின் கட்டாயம்-பொதுமக்கள் கருத்து


சென்னை-கன்னியாகுமரி கப்பல் போக்குவரத்து:கடல்வழி பயணம் காலத்தின் கட்டாயம்-பொதுமக்கள் கருத்து
x

சென்னை-கன்னியாகுமரி கப்பல் போக்குவரத்து: கடல்வழி பயணம் காலத்தின் கட்டாயம் என்பது பற்றி பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

திருநெல்வேலி

கப்பல்கள், படகுகள் மூலமாக ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கடல் வழியாக செல்லும் போக்குவரத்து உள்நாட்டு அளவில் அதிக பயன்பாடுகள் இல்லாமல் இருந்தாலும், சர்வதேச அளவில் மிக முக்கிய போக்குவரத்தாக இருக்கிறது.

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் சென்னை துறைமுகம், எண்ணூர் காமராஜர் துறைமுகம், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் போன்றவை முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும்.

சென்னை துறைமுகம் வழியாக கார், தோல் பொருட்கள், ஆயத்த ஆடைகள், ரசாயனங்கள், ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள் மற்றும் பொறியியல் எந்திரங்களின் உதிரி பாகங்கள் ஆகியவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

அதேபோல், உணவுப் பொருட்கள், உரங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் ஆகியவை இறக்குமதி செய்யப்படுகின்றன.

எண்ணூர் காமராஜர் துறைமுகத்தின் மூலம் நிலக்கரி, பெட்ரோலியப் பொருட்கள், வேதியியல் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. வ.உ.சி. துறைமுகம் மூலம் உணவு, மாட்டுத் தீவனம், கனிமங்கள், சமையல் எண்ணெய், சிமெண்டு போன்றவை கையாளப்படுகின்றன.

பயணிகள் கப்பல்

துறைமுகங்கள் மூலம் சரக்கு போக்குவரத்து நடந்து வந்தாலும், பயணிகள் போக்குவரத்து இதுவரை தமிழ்நாட்டில் சாத்தியப்படாமலேயே இருந்து வருகிறது.

எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்த போது, சென்னை, புதுச்சேரி, காரைக்கால் வழியாக கன்னியாகுமரிக்கு மிதவைப் படகு (ஹோவர்கிராப்ட்) போக்குவரத்தை தொடங்கத்திட்டம் தீட்டினார். இதுதொடர்பாக ஜப்பானில் உள்ள நிறுவனத்திடம் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. அதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் அந்த திட்டம் ஏனோ செயல் வடிவம் பெறவில்லை.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் நலன் கருதி தற்போது பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வரும் நிலையில், சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து திட்டத்தையும் நிறைவேற்றித் தரவேண்டும் என்பது தமிழ்நாட்டு மக்களின் குரலாக இருக்கிறது.

வழிபாட்டு தலங்கள்

நெல்லை மாவட்டம் உவரியைச் சேர்ந்த மீனவர் ஜெனி:-

சென்னை-கன்னியாகுமரி கடல் வழி போக்குவரத்தானது சுற்றுலா பயணமாகவும், புனித யாத்திரை பயணமாகவும் செல்லக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். கப்பல் போக்குவரத்து செல்லக்கூடிய வழியில் இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் வழிபாட்டுதலங்கள் உள்ளன. இந்த கப்பல் போக்குவரத்தை பயன்படுத்தும் வகையில் அந்தந்த இடங்களில் பயணிகளை ஏற்றி இறக்கி செல்லும் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். இந்த கடல் வழி போக்குவரத்து மக்களுக்கு மகிழ்ச்சியை தரும் வகையில் அமைய வேண்டும்.

கூட்டப்பனையைச் சேர்ந்த கவுன்சிலர் அந்தோணி சேவியர்:-

கடல் வழி போக்குவரத்தானது கடலை நம்பி இருக்கின்ற மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையிலும், எந்தவித அச்சுறுத்தலும், பாதிப்பும் இன்றி செயல்படுத்த வேண்டும். கடலோர பகுதியில் வாழும் பெரும்பாலான இளைஞர்கள் கடல்சார்ந்த படிப்புகள் படித்துள்ளனர். அவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். இதை கவனத்தில் கொண்டு இந்த போக்குவரத்தை செயல்படுத்த வேண்டும்.

புதிய அனுபவம்

நெல்லை மாவட்ட மீன் வியாபாரிகள் சங்க தலைவர் ரைமண்ட்:-

சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு கப்பல் போக்குவரத்து தொடங்குவதை வரவேற்கிறோம். தென்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பலர் சென்னையில் தொழில் செய்து வருகின்றனர். இங்கு விளையக்கூடிய விவசாய பொருட்கள் சாலை மார்க்கமாக சென்னைக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டால் இனிவரும் காலங்களில் விளைபொருட்களை கப்பல் மூலம் அனுப்பி வைக்கலாம். இது வியாபாரிகளுக்கு வரபிரசாதம் ஆகும். அதேநேரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு கடல் வழி போக்குவரத்து புதிய அனுபவத்தை தரும்.

கப்பல் நிறுத்தம் வேண்டும்

திசையன்விளை கட்டிட பொறியாளர்கள் சங்க தலைவர் பி.டி.ஆனந்தராஜ்:-

இந்த போக்குவரத்து தொடங்கப்பட்டால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். கப்பல் செல்லும் வழியில் நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலங்களான உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில், அந்தோணியார் ஆலயம், கப்பல் மாதா ஆலயம், விசுவாமித்திரர் கோவில், ஆத்தங்கரை பள்ளிவாசல் உள்ளது. சுற்றுலா பயணிகள் வந்து செல்வதற்கு வசதியாக உவரி கடலில் பயணிகளை ஏற்றி செல்லும் வகையில் கப்பல் நிறுத்தம் அமைக்க வேண்டும்.

கப்பல் போக்குவரத்து மூலம் கடற்கரை பகுதி கிராமங்கள் வளர்ச்சியடையும், மீனவர்களின் கடல் வணிகம் பெருகும், படித்த இளைஞர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். கட்டுமான பொருட்களை அதிக அளவில் கொண்டுவந்து விரைவாக பணிகளை முடிக்க வாய்ப்பு கிடைக்கும். ஆகவே இந்த கடல் வழி போக்குவரத்து வரவேற்கத்தக்கது தான்.

சுற்றுலாவாக செல்லலாம்

தென்காசியை சேர்ந்த ஹரிஹரன்:-

நான் அடிக்கடி நாகர்கோவில், கன்னியாகுமரி செல்வேன். என்னைப் பொருத்தவரை கடல் வழி போக்குவரத்தால் நேரம் குறையும் என்று கூற முடியாது.

உதாரணமாக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு 2 மணி நேரத்தில் வர முடியும். ஆனால் விமான நிலையத்திற்கு செல்லும் போதும், மீண்டும் தரையிறங்கி வெளியே வரும் போதும் ஆகும் நேரத்தை பார்த்தால் கூடுதலாக 2 மணி நேரமாகிறது.

இதேபோன்று தான் கடல் வழி ேபாக்குவரத்தில் கப்பலுக்குள் செல்லும் நேரம், கப்பலில் இருந்து இறங்கி வெளியே வரும் நேரம், பிறகு நாம் வீட்டிற்கு வரும் நேரம் ஆகியவற்றை கணக்கிட்டால் சாலை மார்க்கமாக வரும் நேரம் ஒன்றாகத்தான் இருக்கும். ஆகவே கடல் வழி ேபாக்குவரத்தை சுற்றுலாவாக மக்கள் செல்லலாம்.

தென்காசியில் டிராவல் ஏஜென்சி நடத்தி வரும் ஜெயபாலன்:-

கடல் வழி போக்குவரத்து சாத்தியம்தான். சுற்றுலா பயணிகளுக்கும் புது அனுபவத்தை கொடுக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.



Next Story