புயல் காரணமாக கடல் நீர் உட்புகுந்து விளைநிலங்கள் பாதிப்பு
வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரத்தில் புயல் காரணமாக கடல் நீர் உட்புகுந்து விளைநிலங்கள் பாதிக்கப்பட்டன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
வேளாங்கண்ணி:
வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரத்தில் புயல் காரணமாக கடல் நீர் உட்புகுந்து விளைநிலங்கள் பாதிக்கப்பட்டன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
சிட்ரங் புயல்
வங்கக்கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை சிட்ரங் புயலாக மாறியது. இதனால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் கடலோர பகுதியில் ராட்சத அலைகள் ஏற்பட்டு கரைப்பகுதியை பலமாக தாக்கின.நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரத்தில் ஊருக்கு நடுவில் பெய்யும் மழை, வெள்ள காலங்களில் வடிவதற்கு கப்பலோடிய மண்டுவாய், காட்டுமண்டுவாய், பூச்சி மண்டுவாய் ஆகிய 3 வாய்க்கால்கள் வழியாக வெள்ள காலங்களில் அதிகமாக மழைநீர் இந்த வடிகால் வழியாக சென்று கடலில் கலக்கிறது.
விவசாயிகள் கவலை
இந்த நிலையில் புயல் மற்றும் மழைக்காலங்களில் கடல்சீற்றம் ஏற்பட்டு இந்த வாய்க்கால் வழியாக கடல் நீர் உட்புகுந்து விளைநிலங்களை பாதிக்கின்றது. கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழையால் இதைப்போல கடல்நீர் விளை நிலங்களுக்குள் புகுந்து மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அந்த பகுதிகளை பார்வையிட்டு மண்வாய்களின் வடிகால் முகத்துவாரத்தில் கற்களைகொட்டி அகலத்தை குறைத்து தண்ணீர் வடிவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அகலத்தை குறைக்க வலியுறுத்தல்
இது குறித்து பிரதாபராமபும் ஊராட்சி தலைவர் சிவராசு கூறியதாவது:- பிரதாபராமபுரம் பகுதிகளில் சுமார் 500 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்களில் நிலக்கடலை, நெல் மற்றும் காய்கறிகள் சாகுபடி செய்து வருகின்றோம். இந்த நிலையில் மழை வெள்ள காலங்களில் பூச்சி மண்டுவாய், கப்பலோட்டியமண்டுவாய், புலிகுத்துக்காட்டும் மண்டுவாய் வழியாக மழையினால் வரக்கூடிய உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்தது. வெள்ள காலங்களில் கடலில் செல்லக்கூடிய உபரி நீர் கடல்நீரோடு கலந்து மீண்டும் விளை நிலங்களில் உட்புகுந்து நிலக்கடலை, நெல் உள்ளிட்ட விவசாயநிலங்களை சேதப்படுத்துகிறது.எனவே சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகள் இந்த மண்வாய் முகத்துவாரத்தில் கற்களைகொட்டி அகலத்தை குறைத்து கடல் உட்புகுவதை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.