சீர்காழியில் 500 குடியிருப்புகளை கடல் நீர் சூழ்ந்தது
சீர்காழியில் 500 குடியிருப்புகளை கடல் நீர் சூழ்ந்தது
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தொடுவாய், மடவாமேடு ஆகிய கிராமங்களில் கடல் சீற்றம் காரணமாக கிராமங்களுக்குள் கடல் நீர் புகுந்து 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சூழ்ந்தது. இதனைத்தொடர்ந்து அந்த பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு புயல் பாதுகாப்பு மையம் மற்றும் பள்ளி கட்டிடம் உள்ளிட்ட இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீனவர்கள் தங்களுடைய விசைப்படகு, பைபர் படகு, கட்டுமரம் ஆகியவற்றை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். இதேபோல் கொள்ளிடம் அருகே மடவாமேடு கிராமத்தில் கடல் சீற்றத்தின் காரணமாக 10 அடி உயரத்திற்கு ராட்சத அலைகள் எழுந்தது. இதன் காரணமாக மடவாமேடு கிராமத்திற்குள் கடல்நீர் புகுந்து குடியிருப்புகளை சூழ்ந்தது.
ஊராட்சிதலைவர், கிராம நிர்வாக அலுவலர் காயம்
இது குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயப்பிரகாஷ், ஊராட்சி மன்ற தலைவர் மூர்த்தி, புதுப்பட்டினம் கிராம நிர்வாக அலுவலர் பவளச்சந்திரன் ஆகியோர் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக சென்றனர்.அவர்கள் கடற்கரையில் நின்று பார்வையிட்டபோது ராட்சத அலையில் அடித்து வரப்பட்ட மரக்கட்டைகள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்கியது இதில் காயம் அடைந்த அவர்கள் புதுப்பட்டினம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
எம்.எல்.ஏ. ஆய்வு
இதுகுறித்து தகவல் அறிந்த பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., கொள்ளிடம் ஒன்றிய ஆணையர் ரெஜினா ராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி மற்றும் அதிகாரிகள் மடவாமேடு கிராமத்திற்கு சென்று அந்த பகுதிகளில் குடியிருப்புகளில் கடல் நீர் உட்புகாதவாறு தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை மேற்கொண்டனர்.