போதை மறுவாழ்வு மையத்திற்கு சீல்
போதை மறுவாழ்வு மையத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
ராமநாதபுரத்தில் தனியார் போதை மறுவாழ்வு மையம் என்ற பெயரில் போதைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிக்க கூடிய மையம் செயல்பட்டு வந்தது. இந்த மையம் தமிழக அரசின் அனுமதி பெற்று மத்திய அரசின் நிதி உதவியுடன் நடத்தப்படுவதாக கூறப்பட்டது. இங்கு மருத்துவ சிகிச்சை மற்றும் மறுவாழ்வு அளிப்பதற்கான உளவியல் ஆலோசனைகள் வழங்குவதற்கான கட்டமைப்பு, டாக்டர்கள், செவிலியர்கள் வசதி இல்லை என்று கூறப்படுகிறது. இந்த மையம் குறித்து அரசுக்கு ஏராளமான புகார்களும் சென்றதாம். கடந்த ஆண்டு ராமநாதபுரம் மருத்துவ இணை இயக்குனர் போதை மறுவாழ்வு மையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தி விதிகளை பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து நோட்டீஸ் அனுப்பி இருந்தாராம். அதன்பின்னரும் மையத்தில் சரிவர மறுவாழ்வு சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் ராமநாதபுரம் மருத்துவ இணை இயக்குனர் புகாரின் பேரில் ராமநாதபுரம் தாசில்தார் சுரேஷ்குமார், கேணிக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்பாபு ஆகியோர் மறுவாழ்வு மையத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அங்கு வேதாரண்யம், தூத்துக்குடி, பெரியபட்டினம் உள்பட பல பகுதிகளை சேர்ந்த 6 போதை மறுவாழ்வுக்காக வந்த நபர்கள் சிகிச்சைக்காக தங்கியிருந்தனர். இவர்களை மீட்ட அதிகாரிகள் குடும்பத்தினரை வரவழைத்து ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தனர். போதை மறுவாழ்வு மைய பொறுப்பாளர் ஐங்கரனிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து போதை மறுவாழ்வு மையத்தினை தாசில்தார் சுரேஷ்குமார் பூட்டி சீல்வைத்தார்.