இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கட்டிடத்திற்கு 'சீல்'
இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கட்டிடத்திற்கு ‘சீல்’
நாகையில் ரூ.88 லட்சம் இழப்பீட்டு தொகை செலுத்தாததால் இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கட்டிடத்திற்கு 'சீல்' வைக்கப்பட்டது.
காஸ்மோபாலிடன் கிளப்
நாகப்பட்டினம் அரசு ஆஸ்பத்திரி அருகே ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட காஸ்மோபாலிடன் கிளப் உள்ளது. 1927-ம் ஆண்டு தொடங்கப்பட்ட காஸ்மோபாலிடன் கிளப்பில் நாகை மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் உறுப்பினராக உள்ளனர்.
இந்த கிளப் வளாகத்தில் இரண்டு சக்கர வாகன பாதுகாப்பு மையம் கட்டணத்திற்கு செயல்படுகிறது. இந்த கிளப் அமைந்துள்ள 7 ஆயிரத்து 229 சதுரமீட்டர் இடம் மற்றும் அதில் உள்ள பழைய புராதான கட்டிடங்கள் நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமானது.
இந்த இடத்திற்கு ரூ.88 லட்சம் இழப்பீட்டு தொகை செலுத்தாமல் நிலுவையில் இருப்பதால் அதனை பூட்டி சீல் வைக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
உறுப்பினர்கள் எதிர்ப்பு
இந்தநிலையில் நேற்று இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராணி தலைமையில் செயல் அலுவலர்கள் தனலட்சுமி, பூமிநாதன், கவியரசு, ஜெயராமன், சண்முகராஜ் உள்ளிட்ட அறநிலையத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
அப்போது கிளப் வளாகத்தில் செயல்படும் இரண்டு சக்கர வாகன பாதுகாப்பு மையத்தை பூட்டி சீல் வைத்தனர். இதற்கு காஸ்மோபாலிடன் கிளப் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் யாரும் தடுக்க கூடாது என கூறினர்.
சீல் வைப்பு
இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் வளாகத்தில் உள்ளே சென்றனர். அப்போது அங்குள்ள அறைகள் பூட்டப்பட்டிருந்தன. இந்த பூட்டை அறநிலையத்துறை ஊழியர்கள் உடைத்து கிளப்புக்கு பூட்டு போட்டு சீல் வைத்தனர்.
அப்போது காஸ்மோபாலிடன் கிளப் நிர்வாக தலைவர் ராஜேந்திரன் நாங்கள் நீதிமன்றம் மூலம் இந்த இடத்தை மீட்போம் என்றார். இதையடுத்து அறநிலையத்துறை ஊழியர்கள் வெளியில் வந்து இரும்பு கேட்டை பூட்டி சீல் வைத்து விட்டு சென்றனர்.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராணி கூறுகையில், அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்த காஸ்மோபாலிடன் கிளப் ரூ.87 லட்சத்து 7 ஆயிரம் இழப்பீடு தொகை செலுத்த வேண்டும். அதற்காக பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் இதுவரை பணம் செலுத்தவில்லை. இதனால் இந்த இடத்திற்கு சீல் வைத்தோம் என்றார்.