அனுமதியின்றி செயல்பட்ட தங்கும் விடுதிக்கு 'சீல்'


அனுமதியின்றி செயல்பட்ட தங்கும் விடுதிக்கு சீல்
x
தினத்தந்தி 22 Jan 2023 12:15 AM IST (Updated: 22 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி அருகே கோடநாடு காட்சி முனை பகுதியில் அனுமதியின்றி செயல்பட்ட தங்கும் விடுதிக்கு, ஊட்டி கோர்ட்டு உத்தரவின்படி அதிகாரிகள் ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி அருகே கோடநாடு காட்சி முனை பகுதியில் அனுமதியின்றி செயல்பட்ட தங்கும் விடுதிக்கு, ஊட்டி கோர்ட்டு உத்தரவின்படி அதிகாரிகள் 'சீல்' வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

ஆக்கிரமிப்பு கட்டிடங்கள்

நீலகிரி மாவட்டத்தில் நீரோடைகள், சதுப்பு நிலங்களை ஆக்கிரமித்தும், வனப்பகுதியை ஒட்டியும் கட்டிடங்கள் கட்டுவது அதிகரித்து வருகிறது. ஆக்கிரமிப்பு கட்டிடங்களால் பேரிடர் காலங்களில் அதிக பாதிப்பு ஏற்படுகிறது. இருப்பினும், அரசு நிலங்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டுவது, தேயிலை தோட்டங்களை அழித்து சாலை அமைப்பது, நிலச்சரிவு ஏற்படும் இடங்களில் தனியார் தங்கும் விடுதிகள், சொகுசு பங்களாக்கள் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.

இதனால் நீலகிரியின் இயற்கை அழகு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாக்க 1993-ம் ஆண்டு மாஸ்டர் பிளான் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதற்கு பின் உள்ளாட்சி அமைப்புகளில் மட்டுமின்றி, வனத்துறை, புவியியல் துறை மற்றும் வேளாண் பொறியியல் துறை ஆகிய 3 துறைகளிடமும் அனுமதி பெற்று மட்டுமே கட்டிடங்கள் கட்ட வேண்டும் என விதி உள்ளது.

தங்கும் விடுதிக்கு 'சீல்'

இந்தநிலையில் கோத்தகிரி அருகே கோடநாடு காட்சி முனை பகுதியில் ஒருவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உணவகத்துடன் கூடிய தனியார் தங்கும் விடுதி கட்டி, அங்குள்ள அறைகளில் வாடகைக்கு சுற்றுலா பயணிகளை தங்க வைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அனுமதி பெறாமல், விதிமுறைகளை மீறி தங்கும் விடுதி கட்டி உள்ளதாக சமூக ஆர்வலர்கள் 2 பேர் நீலகிரி மாவட்ட கோர்ட்டில் கடந்த 2016-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர்.

இந்தநிலையில் அனுமதியில்லாத கட்டிடத்திற்கு 'சீல்' வைக்க வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு ஊட்டி கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி கிராம ஊராட்சி உதவி இயக்குனர் அலுவலக வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர், கோத்தகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபால், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வேணுகோபால் மற்றும் அதிகாரிகள் கோடநாடு காட்சி முனை பகுதிக்கு சென்று அனுமதி பெறாமல் கட்டி செயல்பட்ட தங்கும் விடுதி மற்றும் உணவகத்தை மூடி 'சீல்' வைத்து நடவடிக்கை எடுத்தனர்.


Next Story