விதிமீறிய கட்டிடத்துக்கு 'சீல்'


விதிமீறிய கட்டிடத்துக்கு சீல்
x
தினத்தந்தி 1 April 2023 12:15 AM IST (Updated: 1 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குன்னூரில் விதிமீறி கட்டப்பட்ட கட்டிடத்துக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

நீலகிரி

குன்னூர்,

குன்னூரில் விதிமீறி கட்டப்பட்ட கட்டிடத்துக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

விதிமீறல் புகார்

நீலகிரி மாவட்டம் மலைப்பிரதேசம் என்பதால், சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு கட்டிடங்கள் கட்ட விதிமுறைகள் விதிக்கப்பட்டு உள்ளன. அதன்படி 7 மீட்டர் உயரத்திற்கு மேல் கட்டிடம் கட்டக்கூடாது. அனுமதி பெற்ற பின்னரே கட்டிடம் கட்ட வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகள் உள்ளது. இருப்பினும், விதிமீறி கட்டிடம் கட்டுவது தொடர் கதையாக உள்ளது.

குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக விதிமீறி கட்டிடங்கள் கட்டுவது அதிகரித்து வருகிறது. இந்த கட்டிடங்கள் குன்னூர் நகராட்சி நிர்வாகத்திடம் முறையாக அனுமதி பெறாமல், கட்டப்பட்டு வருகிறது. இந்தநிலையில் குன்னூர் நகராட்சியின் 3-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளான எம்.ஜி.ஆர்.நகர், காலேஜ்ரோடு போன்ற பகுதிகளில் கட்டுமான பணிகள் நடந்து வருவதாகவும், அனுமதி பெறாமல் கட்டப்பட்டு வருவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.

கட்டிடத்துக்கு 'சீல்'

அதன் பேரில் நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். இதில் அனுமதி பெறாமல் கட்டிடம் கட்டியது தெரியவந்தது. உடனே அந்த கட்டிடத்திற்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். மேலும் கட்டிட பணிகளை மேற்கொள்ளக்கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தினர்.

இதே போல் புரூக்லேண்ட்ஸ், அட்டடி, சி.எம்.எஸ். மற்றும் நகர பகுதிகளில் அனுமதி பெறாமல் கட்டப்பட்டு வரும் கட்டிடங்களுக்கு பாரபட்சம் இல்லாமல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். கடந்த 29-ந் தேதி பலத்த மழையின் போது குன்னூர் லேம்ஸ்ராக் சாலையில் சி.எம்.எஸ். முதல் டேன்டீ குடியிருப்புக்கு செல்லும் சாலையில் மண் சரிவு ஏற்பட்டது. இதற்கு அனுமதி இல்லாமல் கட்டிடங்கள் கட்டியதே காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story