பொன்னேரி அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்ட 42 வீடுகளுக்கு 'சீல்' - பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு


பொன்னேரி அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்ட 42 வீடுகளுக்கு சீல் - பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு
x

பொன்னேரி அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்ட 42 வீடுகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. பொதுமக்களின் சாலை மறியல் போராட்டத்தால் பரபரப்பு நிலவியது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே சைனாவரம் கிராமத்தில் காளத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை வேலூர் இணை ஆணையர் மண்டலத்திற்கு உட்பட்ட திருவள்ளூர் மாவட்ட உதவி ஆணையர் கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த கோவிலுக்கு சொந்தமான 14.51 ஏக்கர் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட நிலையில் 42 வீடுகள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததையடுத்து மீண்டும் கோர்ட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.

இந்த நிலையில் நேற்று கோர்ட்டு உத்தரவின்படி 42 வீடுகளுக்கு சீல் வைக்க இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் லட்சுமணன், திருவள்ளூர் மாவட்ட உதவி ஆணையர் சித்ராதேவி, பொன்னேரி தாசில்தார் ரஜினிகாந்த், இந்து சமய அறநிலையத்துறை திருவள்ளூர் மாவட்ட தாசில்தார் ப்ரீத்தி, துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி, ரித்து, சந்திரகாசன், செயல் அலுவலர்கள் பிரகாஷ், மாதவன், சுசில்குமார், நாராயணன் போலீஸ் துறை அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகள், திருவள்ளூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை ஆய்வர்கள், கோவில் பணியாளர்கள் சைனாவரம் கிராமத்திற்கு வந்தனர். அப்போது பொதுமக்கள் ஒன்றுகூடி 42 வீடுகளுக்கு சீல் வைக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். அதிகாரிகள் கோர்ட்டுக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டிய அவசியத்தை கூறினர்.

பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளாமல் பொன்னேரி -பஞ்செட்டி நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் 6 மணி நேரத்திற்கு மேலாக நடந்து கொண்டிருந்த நிலையில் நேற்று இரவு 42 வீடுகளுக்கும் போலீஸ் துறை அதிகாரிகள் முன்னிலையில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.


Next Story