புகையிலை பொருட்கள் விற்ற 3 கடைகளுக்கு சீல் வைப்பு
சங்கரன்கோவிலில் புகையிலை பொருட்கள் விற்ற 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவிலில் திருவேங்கடம் ரோடு, கீழரதவீதி, கவுரிசங்கர் தியேட்டர் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள அப்துல்காதர், அண்ணாமலை, முத்துசாமி ஆகியோரது கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி டாக்டர் சசிதீபா தலைமையில் அலுவலர்கள் முகமது அப்துல் ஹக்கீம், செல்வராஜ் ஆகியோர் சோதனை நடத்தினர். அப்போது புகையிலை பொருட்கள் விற்றதாக கண்டறியப்பட்டு, அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
திருவேங்கடம் ரோடு பகுதியில் உள்ள கடைக்கு சீல் வைக்க முயன்றபோது அப்பகுதியில் ஏராளமானோர் திரண்டு, ஏற்கனவே அபராதம் செலுத்தி விட்டதாகவும், தற்போது புகையிலை பொருட்கள் எதுவும் விற்பனை செய்யவில்லை எனவும், எனவே கடைக்கு சீல் வைக்கக்கூடாது என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் சங்கரன்கோவில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சக்திவேல் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, பின்னர் கடைக்கு சீல் வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.