அதிகம் கட்டணம் வசூலித்த இ- சேவை மையத்திற்கு சீல்
அதிகம் கட்டணம் வசூலித்த இ- சேவை மையத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
திருப்பத்தூர் தாலுகா பொம்மிகுப்பம் கிராமத்தில் உள்ள இ -சேவை மையத்தில் அதிக கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தது. இதனைத் தொடர்ந்து, திருப்பத்தூர் தாசில்தார் சிவபிரகாசம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சான்றுகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தொகை 60 ரூபாயைவிட கூடுதலாக கட்டணம் வசூல் செய்தது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து இ- சேவை மையத்திற்கு தாசில்தார் சிவப்பிரகாசம் சீல் வைத்தார்.
இது குறித்து அவர் கூறுகையில் இ- சேவை மையத்தில் குடும்ப அட்டை, பிறப்புச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ், இறப்பு சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் கார்டு உள்ளிட்ட அனைத்து வகையான சேவைகளுக்கும் அரசு நிர்ணயம் செய்த கட்டணம் தான் வசூல் செய்ய வேண்டும். அதிக கட்டணம் வசூலித்தால் இ- சேவை மையத்துக்கு சீல் வைக்கப்படும். வேறு எங்காவது இ-சேவை மையத்தில் இது போன்ற கூடுதல் கட்டணம் வசூலித்தால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என தெரிவித்தார்.