தவறான சிகிச்சையால் கொத்தனார் சாவு:மருந்தகத்துக்கு சீல் வைப்பு
தவறான சிகிச்சையால் கொத்தனார் உயிரிழந்த சம்பவத்ததில் மருந்தகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
பரங்கிப்பேட்டை,
பரங்கிப்பேட்டை அருகே உள்ள சின்னகுமட்டி வெட்டிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருடைய மகன் தனசேகர் (வயது 25). கொத்தனாரான இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் தனசேகர் கடந்த 4-ந்தேதி உடல்நிலை சாியில்லாத காரணத்தால் கொத்தட்டை கடைவீதியில் உள்ள ஒரு தனியார் மருந்துக்கடைக்கு சென்றுள்ளார். அங்கு இருந்த அதன் உரிமையாளர் அவருக்கு சிகிச்சை அளித்ததோடு, குளுக்கோஸ் மற்றும் ஊசி போட்டுள்ளார்.
பின்னர், வீடு திரும்பிய தனசேகருக்கு தீடீரென உடல்நிலை மோசமானது. இதையடுத்து அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ராஜா முத்தையா ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் தனசேகர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதா(பொறுப்பு), சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் டாக்டர் பரிந்துரை இன்றி தனசேகருக்கு மருத்துவம் பார்த்ததால் புவனகிரி தாசில்தார் செல்வகுமார் மற்றும் மருத்துவக்குழுவினர் கொத்தட்டையில் உள்ள மருந்தகத்துக்கு சீல் வைத்தனர்.