அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த சீமான்
கொட்டும் மழையில் மதுரையில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் பேசும்போது, அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்தார். கேள்விகளுக்கு என்னிடம் பதில் உண்டு, அவரிடம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
கொட்டும் மழையில் மதுரையில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் பேசும்போது, அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்தார். கேள்விகளுக்கு என்னிடம் பதில் உண்டு, அவரிடம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
பொதுக்கூட்டம்
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திடக்கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் பொதுக்கூட்டம் நடந்தது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். கூட்டம் நடந்தபோது, பலத்த மழை பெய்தது. கொட்டும் மழையில் நனைந்தபடி சீமான் பேசியதாவது:-
சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என நீண்டகாலமாக போராடி வருபவர் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ். ஆனாலும் அது குறித்து கணக்கெடுப்பு நடத்தவில்லை.
நாங்கள், கணகெடுப்பு நடத்தும் வரை விடமாட்டோம். இதுவரை ஆட்சி நடத்திய 2 திராவிட கட்சிகளும் சமூக நீதியை வழங்காமல் மக்களுக்கு அநீதியை வழங்கிவிட்டார்கள்.
வந்தவரை எல்லாம் வாழ வைத்தவர்கள் தமிழர்கள், என்ற வார்த்தையில் தமிழர்கள் விழுந்துவிட்டனர். அதில் இருந்து இன்னும் எழும்பாமல் இருப்பதால்தான் அனைத்து மாநிலத்தினரும் தமிழகத்தை ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டனர். வடமாநிலத்தவர்கள் தமிழகத்திற்கு படை எடுத்து வந்து கொண்டிருக்கிறார்கள். மற்றவர்களை போல் சாமியை காக்க அரசியல் செய்யவில்லை. பூமியை காக்க அரசியல் செய்கிறோம்.
மக்களுக்கான அரசியல்
மண்ணின் மக்களுக்கான அரசியலை செய்வதால் சீமான் இனவெறியர் என கூறுகிறார்கள். மக்களுக்காக அவ்வாறு பேசுவது, மற்றவர்களுக்கு இனவெறியாக தெரிந்தால் அது எனக்கு பெருமைதான். எந்த சாதியினர் எவ்வளவு எண்ணிக்கையில் இருக்கிறார்களோ, அந்த எண்ணிக்கையில் அவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும்.
ரேஷன் அட்டை அடிப்படையில், ஒரு குடும்பத்தில் உள்ள ஒரு மூதாட்டிக்கு 10 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. இதுபோல், 10 பேர் இருக்கும் குடும்பத்திற்கும் 10 கிலோ அரிசி வழங்குவதில் எந்த சமூக நீதி இருக்கிறது. இதனை மாற்றுவதற்காகத்தான் இந்த போர் நடக்கிறது. சமத்துவம் இல்லாமல் வரி வசூலிக்கப்படுகிறது.
அண்ணாமலையிடம் பதில் இல்லை
சீமானிடம் என்ன கேள்வி கேட்டாலும் பதில் கூறுகிறார், அவர் என்ன ஞானியா? என பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கேட்கிறார். அறிவது அறிவு. உணர்வது ஞானம். நான் அனைத்தையும் உணர்வேன். என்னிடம் அனைத்திற்கும் பதில் இருக்கிறது. அதனால் கேள்வி கேட்பவர்களுக்கு பதில் அளிக்கிறேன். அண்ணாமலையிடம் பதில் இல்லை. அதனால் அவர் அமைதியாக இருக்கிறார். மு.க.ஸ்டாலின் ஒன்றுமே செய்யவில்லை என அண்ணாமலை கூறுகிறார். 8 ஆண்டுகளாக மோடி என்ன செய்தார் என அண்ணாமலை பதில் கூற முடியுமா?
பல புத்தகங்களை எழுதியவர்கள் எல்லாம் அமைதியாக இருக்கின்றனர். ஆனால், 20 ஆயிரம் புத்தகங்களை படித்ததாக கூறும், அண்ணாமலை அவ்வாறு இருக்க மறுக்கிறார். அவர் அவசரப்பட்டு ஐ.பி.எஸ். வேலையை விட்டுவிட்டார். கட்சியில் அவரை இன்னும் 2 வருடம் வைத்திருப்பார்கள். அதன்பின்பு அவரின் நிலை என்ன என்பது தெரியாது. ஏற்கனவே இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் இப்போது என்ன ஆனார் என்றே தெரியவில்லை. தமிழிசை சவுந்தரராஜனுக்கு, கவர்னர் பதவி வழங்கியதுபோல், எச்.ராஜாவுக்கும் கவர்னர் பதவி வழங்க வேண்டும். கவர்னர் பதவிக்காகத்தான் அவர் இப்படி பேசி வருகிறார்.
போதை பழக்கம்
இலவசங்கள் கொடுத்து உழைப்பை மறக்க வைத்து விட்டனர். போதைக்கு அடிமையான தலைமுறை உருவாகி வருகிறது. நாடற்றவர்களாக தமிழர்கள் மாறிவிடக்கூடாது. அதற்காகத்தான் இந்த போராட்டம். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இல்லாவிட்டால் சமூக நீதி என்று பேசுவதை நிறுத்த வேண்டும். இனியும் ஏமாற தமிழக மக்கள் தயாராக இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தின் முடிவில், கட்சி தொண்டரின் குழந்தைக்கு, துவாரகா என சீமான் பெயர் சூட்டினார்.