100 அடிக்கு சேறாக மாறிய கடற்கரை
வேதாரண்யம் பகுதியில் 100 அடிக்கு கடற்கரை சேறாக காட்சி அளிக்கிறது. இதனால் புனித நீராட முடியாமல் பக்தர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
வேதாரண்யம் பகுதியில் 100 அடிக்கு கடற்கரை சேறாக காட்சி அளிக்கிறது. இதனால் புனித நீராட முடியாமல் பக்தர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
வேதாரண்யேஸ்வரர் கோவில்
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் பிரசித்தி பெற்ற வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்பு பெற்ற இந்த கோவில் ரிக், யஜூர், சாம, அதர்வணம் ஆகிய வேதங்களால் பூஜிக்கப்பட்ட கோவிலாகும்.
வேதம் செடியாகி, கொடியாகி, மரமாகி வழிபட்டதால் இந்த கோவில் உள்ள பகுதி வேதாரண்யம் என்ற பெயரை பெற்றது. 64 சக்தி பீடங்களில் சுந்தரி பீடமாக உள்ள இந்த கோவிலில் இறைவனாக வேதாரண்யேஸ்வரர் வேதநாயகி அம்மனுடன் அருள்பாலித்து வருகிறார்கள்.
தலவரலாறு
இக்கோவிலில் அகத்திய முனிவருக்கு சிவபெருமான் திருமண கோலத்தில் காட்சி தந்ததாகவும், வேதங்கள் பூஜை செய்து மூடிக்கிடந்த கோவில் கதவை அப்பர், சம்பந்தர் ஆகியோர் தேவாரப்பாடல் பாடி திறந்ததாகவும் தலவரலாறு கூறுகிறது.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை அமாவாசை, ஆடி அமாவாசை உள்ளிட்ட நாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வாக்கம். அப்போது கோவில் எதிரே உள்ள சன்னதி கடலில் சாமி எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறும்.
வேத நதி
சன்னதி கடலை வேத நதி என்றும் அழைக்கிறார்கள். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் இந்த கடலில் புனித நீராடி வேதாரண்யேஸ்வரரை சாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். கடந்த ஒரு ஆண்டாக வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறை கிராமத்தில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடலில் 2½ கிலோ மீட்டர் தூரத்தில் கருங்கல் தடுப்பு ஏற்படுத்தி தூண்டில் முள் வளைவுடன் மீன் பிடி துறைமுகம் அமைத்து வருகிறார்கள்.
சேறாக மாறிய கடற்கரை
இந்த நிலையில் சன்னதி கடலோரம் ஆறுகாட்டுத்துறையில் இருந்து மணியன் தீவு வரை 2½ கிலோ மீட்டர் தூரத்திற்கு கடற்கரையில் சேறாக காட்சி அளிக்கிறது. கடற்கரையில் 100 அடிக்கு சேறும், சகதியுமாக இருப்பதால், பக்தர்களால் கடலுக்கு சென்று புனித நீராட முடியவில்லை. இதனால் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
எனவே அரசு அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து, வல்லுனர் குழுவை அமைத்து கடற்கரையில் சேறு சேர்வதை தடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
நீராடினால் முக்தி
திருவாரூரில் பிறந்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி, திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி, சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி, காஞ்சியில் வாழ்ந்தால் முக்தி, வேதாரண்யத்தில் நீராடினால் முக்தி என்பது பழமொழி.