பருவ கால பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்
நேரடி நெல் கொள்முதல் நிலைய பருவ கால பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என மண்டல செயற்குழு கூட்டத்தில் தீர்மானம நிறைவேற்றபட்டது
மயிலாடுதுறை சித்தர்க்காட்டில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்க கொடியேற்று விழா நடந்தது. விழாவில் சங்க மாநில பொதுச் செயலாளர் இளவரி தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்து பேசினார். மாநிலத் துணைத் தலைவர் பன்னீர்செல்வம், துணைப் பொதுச் செயலாளர் பாண்டியன், அமைப்பு செயலாளர் ராஜீவ்காந்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதனைத் தொடர்ந்து காமராஜர் பவனில் தொழிற்சங்க மண்டல செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மண்டல செயலாளர் இளமுருகு வரவேற்றார். கூட்டத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு கருணைத்தொகையாக ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் 2016 வரை பணியமர்த்தப்பட்ட பருவ கால பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நுகர்பொருள் வாணிபக்கழகத்திற்கு உணவு தானியங்களை கொண்டு செல்ல புதிய போக்குவரத்து ஒப்பந்ததாரரை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் சொக்கலிங்கம், மாவட்ட நிர்வாகிகள் ராமச்சந்திரன், ராமலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மண்டல பொருளாளர் சீதாராமன் நன்றி கூறினார்.