ரூ.3 கோடியுடன் மளிகைக்கடைக்காரர் தலைமறைவு
திருப்பூரில் ஏலச்சீட்டு, பலகார சீட்டு நடத்திய மளிகைக்கடைக்காரர் ரூ.2 கோடியே 90 லட்சத்துடன் மாயமானார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர் மல்க கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து முறையிட்டனர்.
திருப்பூரில் ஏலச்சீட்டு, பலகார சீட்டு நடத்திய மளிகைக்கடைக்காரர் ரூ.2 கோடியே 90 லட்சத்துடன் மாயமானார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர் மல்க கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து முறையிட்டனர்.
பலகார சீட்டு
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்கள் மூலமாக தெரிவித்தனர்.
அப்போது திருப்பூர் செரங்காடு, தாராபுரம் ரோடு சுற்றுப்புற பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் வந்து கண்ணீர் மல்க புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
செரங்காட்டில் மளிகைக்கடை வைத்திருந்த குமார் மற்றும் அவருடைய குடும்பத்தினர் தீபாவளி பலகார சீட்டு, ஏலச்சீட்டு நடத்தினர். அவர்கள் 18 ஆண்டுகளாக அந்த பகுதியில் சீட்டு நடத்தி வந்ததால் ஏராளமானோர் அவரிடம் சீட்டுப்பணம் கட்டி வந்தோம். பலகார சீட்டுக்கு ரூ.5,200 செலுத்தினால் தீபாவளி பண்டிகைக்கு முன்பு ரூ.6 ஆயிரம் கொடுத்து பலகாரம் கொடுப்பார்கள். அதன்படி ஒவ்வொருவரும் 10 முதல் 15 வரை பலகார சீட்டுகளை சேர்த்து கட்டினார்கள். அதன்படி மொத்தம் 217 பேர் ரூ.1 கோடியே 3 லட்சத்தை குமாரிடம் செலுத்தியுள்ளனர். மேலும் ஏலச்சீட்டுக்கும் பணம் கட்டியுள்ளனர்.
ரூ.2 கோடியே 90 லட்சம்
இந்த நிலையில் கடந்த மாதம் 19-ந்தேதி குமார் மற்றும் அவருடைய குடும்பத்தினர் திடீரென்று தலைமறைவாகி விட்டனர். அவர்களின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.2 கோடியே 90 லட்சத்தை ஏமாற்றிவிட்டனர். அவரை கண்டுபிடித்து எங்கள் பணத்தை மீட்டுக்கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் மனுவில் கூறியுள்ளனர்.
இவர்கள் ஏற்கனவே திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.