இருபிரிவினர் மோதல்; கல்வீச்சில் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 13 பேர் காயம்
பெண்ணாடம் அருகே ஏற்பட்ட மோதலில் இருபிரிவினர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். இதில் 3 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 13 பேர் காயமடைந்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பெண்ணாடம்,:
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள துறையூர் காலனியை சேர்ந்தவர் வீரமுத்து மகன் ராஜா. இவரும், முருகன்குடி கிராமத்தை சேர்ந்த நசின்ராஜ் என்பவரும் அரியலூர் மாவட்டம் கூவத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2-ம் ஆண்டு பயின்று வருகின்றனர்.
வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள் இருவருக்கும் இடையே நேற்று மாலை தொழிற்பயிற்சி நிலையத்தில் வாய்த்தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து இருவரும் தங்களது உறவினர்கள் மற்றும் கிராம மக்களிடம் தெரிவித்துள்ளனர். இதனால் கருவேப்பிலங்குறிச்சி பஸ் நிறுத்தத்தில் தயாராக இருந்த ராஜாவின் ஆதரவாளர்கள், நசின்ராஜை மறித்து சரமாரியாக தாக்கினர். இதற்கு பதிலடியாக நசின்ராஜ், தனது உறவினர்களுடன் சேர்ந்து முருகன்குடி பஸ் நிலையத்தில் ராஜாவை தாக்கினர்.
போலீசில் புகார் கொடுக்க...
இது பற்றி புகார் கொடுப்பதற்காக துறையூர் காலனி மக்கள் நேற்று இரவு 7 மணிக்கு பெண்ணாடம் போலீஸ் நிலையத்துக்கு சென்றனர். இதனிடையே துறையூர் காலனியை சேர்ந்த இளைஞர்கள், துறையூர் பஸ் நிறுத்தத்தில் ஒன்று கூடி பேசிக்கொண்டிருந்தனர்.
அந்த சமயத்தில் துறையூர் கிராமத்தை சேர்ந்த ஒருவர், காலனியை சேர்ந்த இளைஞர்களை ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் காலனி இளைஞர்கள், அவரை தாக்கியுள்ளனர்.
கற்களை வீசி தாக்குதல்
இது பற்றி அறிந்ததும் துறையூர் காலனி மக்களும், துறையூர் கிராம மக்களும் இரவு 7.15 மணிக்கு துறையூர் பஸ் நிறுத்தத்தில் ஒன்று திரண்டு வாக்குவாதத்தி்ல் ஈடுபட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் இருபிரிவினரிடையே மோதலாக மாறியது. இருபிரிவினரும் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் பெண்ணாடம் போலீசார் விரைந்து வந்து இருபிரிவினரையும் தடுத்தனர். இதில் அவர்கள் மீதும் கற்கள் வீசப்பட்டன. இந்த தாக்குதலில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சின்னதுரை, சுப்பிரமணியன். கோதண்டராமன் ஆகியோரும், துறையூரை சேர்ந்த இந்திரா, எல்லகுண்டு, பழனிவேல், சரவணன், கார்த்திக் உள்பட 10 பேரும் காயமடைந்தனர். இவர்கள் அனைவரையும் பெண்ணாடம் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சாலை மறியல்
மேலும் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு, மோதலில் ஈடுபட்ட இருபிரிவினரையும் தடுத்து நிறுத்தினர். இதனை தொடர்ந்து இருபிரிவினரும் அடுத்தடுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி இருபிரிவினரையும் கலைத்தார்.
இருப்பினும் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால் துறையூரில் பாதுகாப்புக்காக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.