இருபிரிவினர் மோதல்; 2 பேர் கைது
திசையன்விளையில் இருபிரிவினர் மோதல் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திசையன்விளை:
திசையன்விளையை அடுத்த மணலிவிளை அரிகிருஷ்ண நாடார் தெருவை சேர்ந்தவர் பெருமாள் (வயது 43). இவரது தம்பி சுப்பிரமணியன் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார். அவரை எதிர்த்து தி.மு.க.சார்பில் போட்டியிட்ட நல்லக்கண்ணு என்ற கண்ணன் வெற்றிபெற்றார் இதுதொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக நேற்று முன்தினம் இரவு செல்வ மருதூர் பெரிய அம்மன் கோவில் முன்பு வைத்து எங்களை எதிர்த்து உங்கள் தம்பியை எப்படி தேர்தலில் போட்டியிட செய்தாய்? என கேட்டு பெருமாளை யாதவர் தெற்குதெருவை சேர்ந்த கொம்பையா, கார்த்திக், முத்து, மாடசாமி ஆகியோர் அடித்து உதைத்து கல்லால் தாக்கியதாக திசையன்விளை போலீசில் பெருமாள் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து மாடசாமியை கைது செய்தார்
இச்சம்பவம் தொடர்பாக மணலிவிளை ரேசன் கடை முன்பு ஏற்பட்ட மோதலில் யாதவர் தெற்கு தெருவை சேர்ந்த கொம்பையா, முத்து, கார்த்திக் ஆகியோரை தாக்கியதாக கொம்பையா கொடுத்த புகாரில் பாலசுப்பிரமணியன் என்ற சுப்பு, பெருமாள், மணிகண்ட சிவராமன், கதிர்வேல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியன் என்ற சுப்பு, மணிகண்ட சிவராமன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். காயம் அடைந்தவர்கள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.