பாதுகாப்பு மீட்பு நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்


பாதுகாப்பு மீட்பு நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்
x
தினத்தந்தி 2 Oct 2022 12:15 AM IST (Updated: 2 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

வடகிழக்கு பருவமழை காலங்களில் பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என அனைத்துத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் மோகன் அறிவுரை கூறினார்

விழுப்புரம்

விழுப்புரம்

ஆலோசனை கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் மோகன் தலைமை தாங்கி பேசியதாவது:-

வடகிழக்கு பருவமழை காலங்களில் பொதுமக்களின் தேவைக்காக 24 மணி நேரமும் இயங்கும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 04146-223265 என்ற தொலைபேசி எண்ணிலோ, 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியின் மூலமாகவோ, 72001 51144 என்ற செல்போன் எண்ணின் வாட்ஸ்அப் மூலமாகவோ, மழை தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம். இவற்றின் மூலம் பெறப்படும் தகவல்கள் மூலம் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மீட்பு நடவடிக்கை

மாவட்டத்தில் 8 இடங்கள் அதிகமாக பாதிக்கப்படும் இடங்களாகவும், 35 இடங்கள் மிதமாக பாதிக்கக்கூடிய இடங்களாகவும், 79 இடங்கள் குறைவாக பாதிக்கக்கூடிய இடங்கள் என மொத்தம் 122 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

மழை வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய இடங்களில் மீட்பு நடவடிக்கை குறித்து பேரிடர் ஒத்திகை நடத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஊரக வளர்ச்சித்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகள், ஊரணிகள், குட்டைகள், திறந்தவெளி கிணறுகள் போன்றவற்றின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். பொதுமக்களை பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து மீட்டு தங்க வைப்பதற்காக, சமுதாயக்கூடங்கள், பள்ளிகளை நிவாரண முகாம்களாக தயார் செய்திட வேண்டும்.

எச்சரிக்கை பதாகை

பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நீர்நிலை பகுதிகளிலும் எச்சரிக்கை பதாகை அமைக்க வேண்டும். மணல் மூட்டைகளை தயார்படுத்திடவேண்டும்.

நெடுஞ்சாலைத்துறையினர் சாலையிலுள்ள பள்ளங்களை மூடி சரிசெய்திடவும், சாலையில் முறிந்து விழும் மரங்களை அகற்ற தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண்மை, தோட்டக்கலைத்துறையினர், பயிர் சேதங்களை துல்லியமாக கணக்கிட்டு, இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடை பராமரிப்புத்துறையினர் கால்நடைகளுக்கு நோய் பரவாமல் சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும்.

ஒருங்கிணைந்து பணியாற்ற

புயல், வெள்ள காலங்களில் மின்தடை ஏற்படாமல் இருக்க மின் வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை முன்கூட்டியே அகற்ற வேண்டும். தேவையான அளவு மின் கம்பங்களை இருப்பு வைத்திருக்க வேண்டும். மழைக்காலங்களில் பொதுமக்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்படாமல், பாதுகாத்திடவும், மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story