திருச்செந்தூரில் பாதுகாப்பு ஏற்பாடுகளை நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் ஆய்வு


தினத்தந்தி 6 Feb 2023 12:15 AM IST (Updated: 6 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் பாதுகாப்பு ஏற்பாடுகளை நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று நடைபெற்ற தைப்பூச திருவிழாவிற்கு பக்தர்களுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதை நெல்லை சரக டி.ஐ.ஜி.பிரவேஷ்குமார் ஆய்வு செய்தார்.

பக்தர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடு

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் தைப்பூச திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் ெசய்தனர். மேலும் பஸ்கள், வேன்கள், கார்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று திருச்செந்தூரில் குவிந்து காணப்பட்டனர்.

இவ்விழாவை முன்னிட்டு மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, 2 துணை சூப்பிரண்டுகள், 13 இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 600 ஆண், பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் சாலைகளில் வாகனங்களிலும் போலீசார் இரவு, பகலாக ரோந்து சுற்றி வந்தனர்.

டி.ஐ.ஜி.ஆய்வு

இந்த நிலையில் நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார் நேற்று திருச்செந்தூர் நகர பகுதி மற்றும் கோவில் வளாகத்தில் ரோந்து சென்று போலீசாரின் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார். ஆய்வின் போது போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், திருச்செந்தூர் துணை சூப்பிரண்டு ஆவுடையப்பன், சாத்தான்குளம் துணை சூப்பிரண்டு அருள், திருச்செந்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story