போலீஸ் நிலையங்களில் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்


போலீஸ் நிலையங்களில் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
x

பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பொன்னை போலீஸ் நிலையங்களில் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

வேலூர்

பேரணாம்பட்டு

பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் காவல்துறை சார்பில் வங்கி மேலாளர்கள், நகை, அடகுக் கடை உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது பேரணாம்பட்டு பகுதி ஆந்திரா- கர்நாடக எல்லைப் பகுதியையொட்டி அமைந்துள்ளது. வங்கிகளிலும், நகை மற்றும் அடகு கடைகளிலும் நகைகளை அடமானம் வைக்க வருபவர்களிடம் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு இல்லாமல் நகைகளை அடகு வைக்க கூடாது. வங்கிகளிலும், கடைகளிலும் சாலையை இணைக்கும் வகையில் நவீன கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். ஏ.டி.எம். மையங்களில் 24 மணி நேரமும் காவலாளி இருக்க வேண்டும். பணத்தை கீழே போட்டு கவனத்தை திசை திருப்பி பணத்தை திருடி செல்லும் நபர்களிடம் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். கூட்டத்தில் வங்கி மேலாளர்கள், நகை, அடகு கடை உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பள்ளிகொண்டா

பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் நகைக் கடைகளில் உள்ளே மட்டும் கேமராக்களை வைத்து வியாபாரம் செய்யாமல் சாலைகளில் செல்வோரை துல்லியமாக படம் பிடிக்கும் வகையில் நவீன கேமராக்களை பொருத்த வேண்டும். பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். மையங்களிலும் இதேபோல் நவீன கேமராக்களை பொருத்த வேண்டும் என வலியுறுத்தினார். ஆலோசனை கூட்டத்தில் பள்ளி கொண்டாபகுதியைச் சேர்ந்த அனைத்து வணிகர்கள், வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பொன்னை

பொன்னை போலீஸ் நிலையத்தில் வங்கி அதிகாரிகள், நகை மற்றும் அடகு கடைகள் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். வங்கிகளில் இரவு காவலர்களை நியமிக்க வேண்டும். வங்கியை சுற்றி இரவு நேரங்களில் மின்விளக்குகள் ஒளிரும் வசதிகள் செய்ய வேண்டும். வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். மையங்களில் எச்சரிக்கை அலாரம், கண்காணிப்பு கேமரா பொருத்துவது உள்ளிட்டவை குறித்து வலியுறுத்தப்பட்டது.

சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன், பெடரல் வங்கி மேலாளர் ரவி தேஜா, இந்தியன் வங்கி மேலாளர் முரளி கிருஷ்ணா, பொன்னை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் சேரலாதன் மற்றும் நகைக்கடை உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.


Next Story